ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது, நீதிமன்ற காவலில் திகார் சிலையில் உள்ளார். இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவலுக்கு எதிராகவும், ஜாமீன் வழங்க கோரியும் இரு வெவ்வேறு மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதி சுரேஷ்குமார் கைட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மோசடி குற்றச்சாட்டு இல்லை என கூறினார். இதற்கு, சிபிஐ தரப்பில் ஆஜரான மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது, தனது பதவியை தவறாக பயன்படுத்தியதற்கு வலுவான ஆதாரம் உள்ளது, என தங்களது வாதத்தை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இந்த வழக்கில் முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்ட அதேநாளில் உச்சநீதிமன்றத்தை நாடிய நீங்கள் உயர்நீதிமன்றத்தை நாடாதது ஏன்? என்றும், இது ஜாமீன் மனுவா? அல்லது நீதிமன்ற காவலுக்கு எதிரான மனுவா? என்று கேள்வியெழுப்பினர். இதைத்தொடர்ந்து பேசிய துஷார் மேத்தா, இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் கூறினார். மேலும், ப.சிதம்பரம் மோசடியில் ஈடுபட்டார் என்பதை கருதியே உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்தது எனவும் அவர் தமது வாதத்தை முன்வைத்தார். நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், நீதிமன்ற காவலை எதிர்த்தும், எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து வைக்கவுமே இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பிலும் காரசார விவாதம் நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஜாமீன் மனு தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், ப.சிதம்பரத்தின் ஜாமீ்ன் மனு தொடர்பான விசாரணையை 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற காவலுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாபஸ் பெற்றுள்ளார்.

மூலக்கதை