காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு; ஐ.நா., தலைவர் விருப்பம்

தினமலர்  தினமலர்
காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு; ஐ.நா., தலைவர் விருப்பம்

நியூயார்க்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, இரு நாடுகளும் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என, ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் 5ல், ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை, பாக்., நாடியது. இது முழுக்க முழுக்க, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில், மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை எனவும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய நாடான பிரான்சில் நடைபெற்ற, ஜி - 7 மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியுடன், ஐ.நா., தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் பேசினார். பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷாமெஹ்மூத் குரேஷியுடனும்அவர் பேச்சு நடத்தினார். மேலும், பாக்.,கிற்கான ஐ.நா., நிரந்தர பிரதிநிதி, மலீஹா லோதியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அவருடனும் கட்டெரஸ் பேசினார்.

இந்நிலையில், இம்மாத இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாக்., பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் பேச்சு நடத்துவார் என, எதிர்பார்க்கப் பட்டது.

இந்நிலையில், ஆன்டனியோ கட்டெரசின் செய்தி தொடர்பாளர், ஸ்டெபானே டுஜரிக், செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், இந்தியா - பாக்., இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில், ஐ.நா.,வின் நிலையில், எப்போதும் மாற்றமில்லை. இருநாடுகளும், இதை பேச்சு மூலம் தீர்த்துக் கொள்வதே ஒரே வழி. இவ்வாறு, அவர் கூறினார்.

இம்ரான்கான் பொதுக்கூட்டம்!

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான முசாபராபாதில் நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்போவதாக பாக். பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் கூறுகையில் ''ஜம்மு - காஷ்மீர் பகுதியை இந்திய படைகள் முழுவதுமாக முற்றுகையிட்டு உள்ளன. அங்கு வசிப்பவர்களுக்கு பாக். எப்போதும் ஆதரவாக செயல்படும் என்பதை இந்த உலகுக்கு உணர்த்த முசாபராபாதில் நாளை மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது'' என்றார்.

மூலக்கதை