கட்சியினர் தாக்கப்படுவதை கண்டித்து ஊர்வலம் செல்ல முயன்ற சந்திரபாபுவுக்கு வீட்டுச்சிறை: மகன், எம்எல்ஏக்கள் உட்பட 1000 பேர் கைது,..ஆந்திராவில் பரபரப்பு

தினகரன்  தினகரன்
கட்சியினர் தாக்கப்படுவதை கண்டித்து ஊர்வலம் செல்ல முயன்ற சந்திரபாபுவுக்கு வீட்டுச்சிறை: மகன், எம்எல்ஏக்கள் உட்பட 1000 பேர் கைது,..ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: தெலுங்கு தேசம் கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதலை  கண்டித்து ஊர்வலம் செல்ல முயன்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு,  அவரது மகன் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக   எம்எல்ஏக்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில்  ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்  முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அன்று முதல் ஆளுங்கட்சியினர், தெலுங்கு  தேசம் கட்சியின் கீழ்மட்ட தலைவர்கள், தொண்டர்களை  குறி வைத்து தாக்குவதாக  குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  கட்சியினர் மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லையாம். இதனால் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில்  முகாம் அமைக்கப்பட்டு, சொந்த ஊர்களில் இருந்து வெளியேறிய கட்சித்  தொண்டர்கள் தங்க வைக்கப்பட்டனர். முகாமில் தங்கியிருந்தவர்களை சமாதானம்  செய்து ஊர்களுக்கு அழைத்து  செல்ல முயன்ற போலீசாரின் முயற்சிகளும்  எடுபடவில்லை.இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது ஆளும்  கட்சியினர் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், நீதி கேட்டும் குண்டூர் அருகே  உள்ள ஆத்மகூருக்கு ‘சலோ ஆத்மகூர்’’ என்ற பெயரில் ஊர்வலம் நேற்று நடைபெறும்  என முன்னாள்  முதல்வர் சந்திரபாபு அறிவித்திருந்தார். இந்த ஊர்வலத்தில்  கலந்து கொள்வதற்காக நேற்று காலை குண்டூர் மாவட்டம், உண்டவல்லியில் உள்ள  சந்திரபாபு வீட்டிற்கு வந்த தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள்,  முன்னாள் அமைச்சர்கள்,  கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை போலீசார்  அதிரடியாக கைது செய்தனர். மேலும் சந்திரபாபு, அவருடைய மகனும் முன்னாள் அமைச்சருமான லோகேஷ் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேற போலீசார் தடை  விதித்து வீட்டுக்காவலில் வைத்தனர். இதையடுத்து டெலிகான்பரன்ஸ் மூலம்  மாநிலம் முழுவதும் கட்சி தலைவர்களை தொடர்புக் கொண்ட சந்திரபாபு, ஆளும்  கட்சியின் போக்கை கண்டித்து காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தனது  வீட்டிலேயே உண்ணாவிரதம் இருக்க  போவதாகவும், மாநிலம் முழுவதும்  போராட்டத்தில் ஈடுபடவும் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.  இதையடுத்து  மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு இடங்களில்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட  ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.  24 மணி நேரம் வெளியே வர தடை: முன்னாள் முதல்வர் சந்திரபாபு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷை காலை 7.30 மணி முதல் வீட்டுக்காவலில் வைத்துள்ள போலீசார் 11 மணி நேரத்திற்கு பிறகும் எதற்காக வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டார் என கூறவில்லை. தற்போது சந்திரபாபுவும், அவரது மகனும் 24 மணி நேரம் வெளியே வர தடை விதித்து அதற்கான நோட்டீசை போலீசார் அவரது வீட்டில் நேற்று இரவு ஒட்டினர். சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி வீட்டிலிருந்து வெளியே வரவேண்டாம் என நோட்டீஸ் ஒட்டியிருப்பது மனித உரிமை மீறல் என தெலுங்கு தேசம் கட்சி வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். 7 பேர் கொலை, 110 பேர் படுகாயம்: இந்த  நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட அறிக்கை ஒன்றில்,  ஒய்எஸ்ஆர்  காங்கிரஸ் கட்சி நடத்திய தாக்குதலில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 110  பேர் காயமடைந்துள்ளனர், 7 பேர்  கொலை செய்யப்பட்டுள்ளனர்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.‘வீட்டுக்காவலில் வைத்தாலும்  சும்மா விடமாட்டேன்’முன்னாள் முதல்வர் சந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், ‘வீட்டுக்காவலில் வைத்து என்னை அைடக்க நினைத்தால் அதனை எக்காரணத்தை கொண்டும் சும்மா விட மாட்டேன். எத்தனை நாட்கள் ஆனாலும் சரி காவல்நிலையத்தில், வீட்டுக்  காவலில் வைத்தாலும்  நான் ஆத்மக்கூரு செல்வதை தடுக்க முடியாது. போலீசாரே என்னை அங்கு அழைத்து  செல்லும் வரை விடமாட்டேன். எனவே என்றும் இந்த நிகழ்ச்சியை நான் ரத்து செய்ய  மாட்டேன்’ என்றார். பின்னர் அவர் காரில்  ஏறி ஆத்மக்கூரு செல்ல முயன்றார். ஆனால் சந்திரபாபு வீட்டின் கதவை போலீசார் கயிற்றால் கட்டி வெளியேற முடியாத வகையில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சந்திரபாபு மேற்கொண்டு செல்ல  முடியாமல் 2 மணிநேரம் காரிலேயே  கட்சி தொண்டர்களுடன் காத்திருந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்றார்.

மூலக்கதை