முதல்வர் முதல் அதிகாரிகள் வரை கண்காணிக்கும் விதத்தில் ஆந்திராவில் மணல் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா : முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு

தினகரன்  தினகரன்
முதல்வர் முதல் அதிகாரிகள் வரை கண்காணிக்கும் விதத்தில் ஆந்திராவில் மணல் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா : முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவு

திருமலை: மணல் கடத்தலை தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று முதல்வர் ஜெகன்மோகன் கூறினார். ஆந்திராவில், வெலகம்புடியில் உள்ள தற்காலிக தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் புதிய மணல் கொள்கை குறித்து அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.  அப்போது அவர் பேசியதாவது: ஊழலை ஒழிப்பதற்காக அரசு கொண்டு வந்துள்ள புதிய மணல் கொள்கையை பொறுத்துக் கொள்ள முடியாமல் இதன் மீது ஏதாவது ஒரு குறை கூறுவதற்காக எதிர்க்கட்சியினர் திட்டம் தீட்டி வருகின்றனர். எனவே எந்த விமர்சனங்களும் வராத வகையில் மணல் நிலுவை மையத்தின் எண்ணிக்கையை (ஸ்டாக் பாயின்ட்) உயர்த்த வேண்டும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறைந்தவுடன் உடனடியாக மணல் குவாரி ஏற்படுத்தி முடிந்தவரை மணல் நிலுவை மையத்திற்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். மணல் மாபியா இல்லாத வகையில் தேவையான தொழில்நுட்ப ரீதியான கருவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மணல் விவகாரத்தில் பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொள்ளாத வகையில் முடிந்தவரை விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்த மட்டத்திலும் ஊழல் என்பதே இருக்கக்கூடாது. எனவே அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்தெந்த இடங்களில் மணல் தட்டுப்பாடு உள்ளது, எப்போது மணல் கிடைக்கும் என்று கட்டுமான நிறுவனங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். அதற்கேற்ப கட்டுமான நிறுவனத்தினர் திட்டம் வகுத்துக் கொள்வார்கள். மணல் கடத்தலை தடுப்பதற்காக அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும். இந்த சோதனைச் சாவடிகளின் கேமரா காட்சிகளை  முதல்வர் உட்பட அதிகாரிகள் எப்போது வேண்டுமென்றாலும் கண்காணிக்கும் விதமாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக மணல் பெறுபவர்களுக்கு சிறப்பு நிலுவை மையத்தை ஏற்பாடு செய்வது குறித்து   பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை