டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து ஒக்கலிக சங்கம் பிரமாண்ட பேரணி : ஆளுநரை சந்தித்து மனு

தினகரன்  தினகரன்
டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து ஒக்கலிக சங்கம் பிரமாண்ட பேரணி : ஆளுநரை சந்தித்து மனு

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து  சேர்த்துள்ளதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில்  கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரின் டெல்லி வீட்டில் சோதனை நடத்தியபோது, கணக்கில்  காட்டாமல் பதுக்கி வைத்திருந்த ரூ.8.59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  இப்புகார் தொடர்பாக அவரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில்  டி.கே.சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராம்நகரம் மாவட்டத்தில்  கடந்த 10 நாட்களாக காங்கிரஸ் மற்றும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் முழு  அடைப்பு, தர்ணா, சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். இந்நிலையில்  நேற்று பெங்களூரு  பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் இருந்து சுதந்திர பூங்கா  வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி ஒக்கலிக சங்கத்தினர் சார்பில் பிரமாண்ட பேரணி நடந்தது. பல்வேறு நகரங்களில் இருந்து லாரி, டிராக்டர்களில் மக்கள்  குவிந்தனர். பேரணியின் முடிவில், முன்னாள் எம்பி சிவராமே கவுடா தலைமையில் ஆளுநர் வி.ஆர்.வாலாவை சந்தித்து மனு கொடுத்தனர்.சிவகுமார் நன்றிடிவிட்டரில் சிவகுமார் வெளியிட்டுள்ள டிவீட்டில், ‘எனக்கு ஆதரவாக காங்கிரஸ், மஜத, ஒக்கலிக்க வகுப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் பெங்களூருவில் பேரணி நடத்தியது எனக்கு பலம் கொடுத்துள்ளது. நான் மீண்டும் சொல்கிறேன். சமூகத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் எந்த செயலிலும் ஈடுபடவில்லை. எதிர்காலத்திலும் செய்ய மாட்டேன். நான் தூய்மையானவன் என்ற நம்பிக்கையில் எனக்காக பேரணி நடத்தியவர்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவிக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை