எய்ம்சில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் உன்னாவ் பெண் வழக்கு விசாரணை தொடங்கியது : வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு

தினகரன்  தினகரன்
எய்ம்சில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் உன்னாவ் பெண் வழக்கு விசாரணை தொடங்கியது : வாக்குமூலங்கள் வீடியோவில் பதிவு

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, உன்னாவ் இளம்பெண்ணின் வழக்கில் நேற்று முதல் விசாரணை தொடங்கியது. உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், கடந்த 2017ல் பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நீண்ட கால தாமதத்திற்குப் பிறகே குல்தீப் சிங் கைது செய்யப்பட்டார். பாஜ அவரை கட்சியிலிருந்து நீக்கியது. இதற்கிடையே, உன்னாவ் இளம்பெண் சில வாரங்களுக்கு முன் தனது வக்கீல் மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்ற போது லாரி மோதி சர்ச்சைக்குரிய வகையில் விபத்து நிகழ்ந்தது. இளம்பெண், அவரது வக்கீலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர். இதன் காரணமாக, உன்னாவ் விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியது. ஆனால், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்நிலை, நீதிமன்றத்துக்கு வந்து வாக்குமூலம் தரும் அளவுக்கு இல்லை என்பதால் மாவட்ட சிறப்பு நீதிபதி  தர்மேஷ் சர்மா, எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக நீதிமன்றம் அமைத்து விசாரிக்க அனுமதி கோரினார். இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, எய்ம்சில் தற்காலிக நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அங்கு நீதிபதி தர்மேஷ் சர்மா நேற்று விசாரணையை தொடங்கினார்.இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட் டிருந்தது.

மூலக்கதை