அமெரிக்க ஊடகங்கள் மீது இந்திய துாதர் குற்றச்சாட்டு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன் : ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்க ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றன,'' என, அமெரிக்காவுக்கான இந்திய துாதர், ஹர்ஷ் வர்தன் சிங்லா, பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவுக்கான இந்திய துாதர், ஹர்ஷ் வர்தன் சிங்லா, வாஷிங்டனில் நேற்று கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மக்களின் நலன் கருதியே, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது. இந்த சட்டத்தால், அங்கு பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத் துக்கு, அந்த சிறப்பு சட்டம் மிகவும் உதவியாக இருந்தது. இதற்காக, அந்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டது. இதை புரிந்து கொள்ளாமல், சிலர், ஒரு தரப்பாக செயல்படுகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த சில ஊடகங்கள், இந்த விஷயத்தை புரிந்து கொள்ளாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும், தொடர்ந்து ஒரு தரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்களுக்கு, காஷ்மீர் நிலைமையை புரிய வைக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். காஷ்மீரில் தற்போது, 90 சதவீத பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எந்த வித வன்முறையும் நடக்கவில்லை. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

வரலாற்று நிகழ்வுபிரதமர் மோடி, இந்த மாதம், 22ல், அமெரிக்காவின், ஹூஸ்டன் நகரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களிடையே உரை நிகழ்த்தவுள்ளார். இதில், 50 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்க உள்ளனர்; இது, வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமையும். ஹர்ஷ் வர்தன் சிங்லா அமெரிக்காவுக்கான இந்திய துாதர்.

மூலக்கதை