காஷ்மீர் விவகாரத்தில் பாக்., மீண்டும் தோல்வி

தினமலர்  தினமலர்

நியூயார்க் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், ஐ.நா.,வை இழுக்கும் முயற்சியில், பாக்., மீண்டும் தோல்வி அடைந்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் 5ல், ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியா - பாக்., இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை, பாக்., நாடியது. இது முழுக்க முழுக்க, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில், மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை எனவும், இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய நாடான பிரான்சில் நடைபெற்ற, ஜி - 7 மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடியுடன், ஐ.நா., தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் பேசினார். பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஷா மெஹ்மூத் குரேஷியுடனும், அவர் பேச்சு நடத்தினார். மேலும், பாக்.,கிற்கான, ஐ.நா., நிரந்தர பிரதிநிதி, மலீஹா லோதியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, அவருடனும் கட்டெரஸ் பேசினார். இந்நிலையில், இம்மாத இறுதியில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. அப்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து, ஐ.நா., தலைவர், ஆன்டனியோ கட்டெரஸ் பேச்சு நடத்துவார் என, எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்டனியோ கட்டெரசின் செய்தி தொடர்பாளர், ஸ்டெபானே டுஜரிக், செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்த விவகாரத்தில், ஐ.நா.,வின் நிலையில், எப்போதும் மாற்றம்இல்லை. இருநாடுகளும், இதை பேச்சு மூலம் தீர்த்துக் கொள்வதே ஒரே வழி.இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை