உயர் தொழில்நுட்ப துறை உச்சம் தொடும்அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கை

தினமலர்  தினமலர்
உயர் தொழில்நுட்ப துறை உச்சம் தொடும்அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வறிக்கை

வாஷிங்டன்:இந்திய உயர் தொழில்நுட்ப துறை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், பெரும் முதலீட்டை ஈர்த்து, ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துஉள்ளது.



இந்தியாவின் உயர் தொழில்நுட்ப துறை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்கவும், லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திறன் கொண்டதாக இருக்கும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வளர்ச்சி



அமெரிக்காவைச் சேர்ந்த வணிக ஆலோசனைக் குழுவான, யு.எஸ்.ஐ.எஸ்.பி.எப்., ‘இந்தியாவில் உயர் தொழில்நுட்ப தயாரிப்புகள்’ எனும் தலைப்பில் அறிக்கையை தயாரித்து, இந்திய அரசுக்கு வழங்கி உள்ளது.இந்த அறிக்கையில், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மிகப் பெரிய துறையாக, உயர் தொழில்நுட்ப துறை வளர்ச்சி காணும் என தெரிவித்துஉள்ளது.



இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும், உயர் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து கிடைத்த பின்னுாட்டத்தின் அடிப்படையில், இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியாவின் உயர் தொழில்நுட்ப துறை, 5.5 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பையும், 14 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.



சவால்



மின்னணுவியல், விமான போக்குவரத்து, மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட பிரிவுகளை கொண்ட, உயர் தொழில்நுட்ப துறையில், பல்வேறு சர்வதேச நிறுவனங்கள், தயாரிப்புக்காக இந்தியாவில் களம் இறங்கி இருப்பதை காண முடிகிறது.இருப்பினும், இந்த துறையில், உலகளவிலான உற்பத்தியில் இந்தியாவின் பங்கு என்பது, 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.




இந்த அறிக்கை, பல்வேறு வகையான ஆய்வுகளை மேற்கொண்டதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்க திட்டமிடும் நிறுவனங்களுக்கான போட்டித் தன்மை மற்றும் இந்த சவால்களை எப்படி எதிர்கொண்டு, சர்வதேச அளவில் சிறந்த தயாரிப்பு நாடாக உருவாவது என்பது குறித்தும் ஆய்வு செய்யப் பட்டது.



சரக்கு போக்குவரத்து செலவை குறைப்பது, பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது, ஒழுங்கு முறை கொள்கைகள் உள்ளிட்ட பலவற்றில் இருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தற்போது, சரக்கு மற்றும் சேவை வரிகளிலிருந்து விலக்கப் பட்டிருக்கும் பொருட்கள் அல்லது துறையை வரி வளையத்துக்குள் கொண்டு வந்து, வரி மற்றும் உற்பத்தி செலவினங்களை குறைக்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.



இலக்கு



மேலும், இந்த துறையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுக்கு, அதிகளவிலான வரி சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.மேலும், துறை குறித்த கொள்கைகளில் நிலைத்த தன்மை வேண்டும். விரைவான ஒப்புதல்கள் வழங்கவும், அரசு கொள்முதல் செய்வதிலும் மத்திய, மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.



மின்னணுவியல் துறையில், சீரான வரி கட்டமைப்பு தேவை.ஏற்றுமதியில், முன்னுரிமை சந்தை அணுகல் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும், மதிப்பு கூட்டலுக்கான விதிமுறை களை எளிமையாக்கி, இலக்கை அடைய வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை