இரட்டை கோபுர தாக்குதல்; அமெரிக்க மக்கள் அஞ்சலி

தினமலர்  தினமலர்
இரட்டை கோபுர தாக்குதல்; அமெரிக்க மக்கள் அஞ்சலி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அல் - குவைதா பயங்கரவாதிகள் நடத்திய இரட்டை கோபுர தாக்குதலின், 18ம் ஆண்டு நினைவு தினம், இன்று(செப்.,11) அனுசரிக்கப்பட்டது.


பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை, 18 ஆண்டுகளுக்கு முன், உலகம் உணர்ந்தது. அப்போது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கம்பீரமாக இருந்த இரட்டை கோபுரங்கள், அல்- - குவைதா பயங்கரவாதிகளால், 2001, செப்., 11ல், தரைமட்டமாக்கப்பட்டன. இதில், 2,500க்கும் அதிகமானோர் இறந்தனர். இந்த தாக்குதலின், 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், தாக்குதல் நடத்த இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


பாக்., பயங்கரவாதிக்கு தடை:

இரட்டை கோபுர தாக்குதலின், 18வது நினைவு தினமான இன்று, பயங்கரவாதத்தை அடியோடு ஒடுக்க, டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பயங்கரவாதத்தை ஒடுக்குவதில், டிரம்ப் அரசு உறுதியாக உள்ளது. 11 பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த, 22 பயங்கரவாதிகளுக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதில், பாகிஸ்தானிலிருந்து செயல்படும், டி.டி.பி., எனப்படும், டெஹ்ரிக் - இ - தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த நுார் வாலியும் ஒருவர்.


இவர் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். டி.டி.பி., அமைப்பின் தலைவராக இருந்த முல்லா பஜுல்லா, கடந்த ஆண்டு, ஜூனில் இறந்தார். இதையடுத்து, இந்த அமைப்பின் தலைவராக, வாலி பொறுப்பேற்றார். நுார் வாலி தலைமையில், டி.டி.பி., அமைப்பு, பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில், பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதனால் தான், நுார் வாலியை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை