சாதிக்குமா ஆஸ்திரேலியா அணி | செப்டம்பர் 11, 2019

தினமலர்  தினமலர்
சாதிக்குமா ஆஸ்திரேலியா அணி | செப்டம்பர் 11, 2019

ஓவல்: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் இன்று துவங்குகிறது. இதில் அசத்தினால் 18 ஆண்டுக்குப்பின் இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலியா கோப்பை வெல்லலாம்.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டிகள் முடிவில், ஆஸ்திரேலியா 2–1 என முன்னிலையில் உள்ளது. இன்று ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன், ஓவலில் துவங்குகிறது.

மிரட்டும் ஸ்மித்

மான்செஸ்டர் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, தொடரை தக்கவைத்த மகிழ்ச்சியில் உள்ளது. இருப்பினும் வார்னர் ‘பார்ம்’ ஏமாற்றம் தருகிறது. உலக கோப்பையில் 10 போட்டியில் 647 ரன் எடுத்த வார்னர், தற்போது 4 போட்டியில் 79 ரன்கள் தான் எடுத்துள்ளார்.

லபுசேன் நான்கு அரை சதம் அடித்து நம்பிக்கை அளிக்கிறார். ஸ்டீவ் ஸ்மித், ஒரு இரட்டை சதம், 3 சதம், 2 அரை சதம் என 671 ரன்கள் எடுத்து மிரட்டுகிறார். வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ், 24 விக்கெட் வீழ்த்தி உள்ளார். ஹேசல்வுட், ஸ்டார்க் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தருகின்றனர். ‘சுழலில்’ லியானுடன், பகுதி நேர பந்துவீச்சாளர் லபுசேனும் நம்பிக்கை தருகிறார். 

2001ல் ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மண்ணில் ஆஷஸ் கோப்பை வென்றது. இதன் பின் பாண்டிங், கிளார்க் என வந்த போதும் முடியவில்லை. ஸ்டீவ் ஸ்மித் தடையால் எதிர்பாராமல் கேப்டன் ஆன டிம் பெய்ன், இம்முறை சாதிக்க வாய்ப்புள்ளது.

தடுமாறும் இங்கிலாந்து

இங்கிலாந்து அணி வழி தெரியாமல் தடுமாறுகிறது. பர்ன்ஸ் ரன் குவித்தாலும், டென்லே ஏமாற்றுகிறார். கேப்டன் ஜோ ரூட் இக்கட்டான நிலையில் உள்ளார். ஸ்டோக்சை மட்டும் நம்பி இருப்பது பலவீனம். பேர்ஸ்டோவ், பட்லர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுக்கின்றனர்.

‘வேகத்தில்’ பிராட் (19 விக்.,), ஆர்ச்சர் (16) நம்பிக்கை தருகின்றனர். இன்று ஜேசன் ராய்க்குப்பதில் சாம் கரான் அல்லது வோக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் மூன்று விக்கெட் மட்டுமே வீழ்த்திய ‘சுழல்’ வீரர் லீச், கூடுதலாக பங்களிப்பு தந்தால் நல்லது.

மூலக்கதை