கெய்ல் 22வது சதம் | செப்டம்பர் 11, 2019

தினமலர்  தினமலர்
கெய்ல் 22வது சதம் | செப்டம்பர் 11, 2019

செயின்ட் கிட்ஸ்: கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் மிரட்டிய ஜமைக்கா அணி வீரர் கெய்ல், 22வது சதம் விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கரீபியன் பிரிமியர் லீக் ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. செயின்ட் கிட்சில் நடந்த லீக் போட்டியில் ஜமைக்கா, செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜமைக்கா அணிக்கு கிறிஸ் கெய்ல் அபார துவக்கம் தந்தார். இவர் 36வது பந்தில் அரை சதம் அடித்தார் கெய்ல்.

கார்லஸ் பிராத்வைட் பந்துவீச்சில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்த கெய்ல், 54வது பந்தில் சதம் விளாசினார். வால்டன் 73 ரன்கள் எடுத்தார். கெய்ல் 116 ரன்களில் (62 பந்து, 7 பவுண்டரி, 10 சிக்சர்) ஆட்டமிழக்க, ஜமைக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய செயின்ட் கிட்ஸ் அணிக்கு தேவன் தாமஸ் (71), லீவிஸ் (53) அரை சதம் விளாச, 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

22

‘டுவென்டி–20’ அரங்கில் அதிக சதம் (22) அடித்த வீரர்கள் பட்டியலில், கெய்ல் ‘நம்பர்–1’ இடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில், ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளிஞ்சர் (8) உள்ளார்.

4

கரீபியன் பிரிமியர் லீக் தொடரில், அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் கெய்ல், டுவைன் ஸ்மித் வகிக்கின்றனர். இவர்கள் தலா 4 சதம் அடித்துள்ளனர்.

954

இப்போட்டியில், 10 சிக்சர் விளாசியதன் மூலம், ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில், அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் பட்டியலில், கெய்ல் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார். இதுவரை 386 போட்டியில் 954 சிக்சர் விளாசி உள்ளார்.

37

ஒட்டுமொத்த ‘டுவென்டி–20’ அரங்கில், அதிக சிக்சர் (37 சிக்சர், 21+16) அடிக்கப்பட்ட போட்டிகள் வரிசையில், இது முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. இதற்கு முன், கடந்த அக்டோபரில் சார்ஜாவில் நடந்த ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக் தொடரில், பால்கா–காபூல் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 37 சிக்சர் அடிக்கப்பட்டிருந்தது.

2

ஒட்டுமொத்த, ‘டுவென்டி–20’ அரங்கில் அதிக ரன்களை ‘சேஸ்’ செய்த போட்டிகள் வரிசையில், இது 2வது இடம் பிடித்தது. நியூசிலாந்துக்கு எதிராக 245 ரன்களை விரட்டிய ஆஸ்திரேலியா (2018) முதலிடம் வகிக்கிறது.

 

மூலக்கதை