பெண் விமான ஊழியரை மிரட்டிய காங். எம்.எல்.ஏ.

தினமலர்  தினமலர்
பெண் விமான ஊழியரை மிரட்டிய காங். எம்.எல்.ஏ.

ராய்ப்பூர்,: விமான நிலையத்திற்கு தாமதமாக வந்ததால், விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத, சத்தீஸ்கர் மாநில, காங்., - எம்.எல்.ஏ., 'ஏர் இந்தியா' பெண் ஊழியரிடம் கடுமையாக நடந்து கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கே, மகாசமுந்த் சட்டசபை தொகுதியின், எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், காங்.,கைச் சேர்ந்த வினோத் சந்திரகர்.

ஆத்திரம்
இவர், 7ம் தேதி, ராய்ப்பூரில் இருந்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சி வரை செல்லும், ஏர் இந்தியா விமானத்தில், மாலை, 6:30 மணிக்கு பயணம் செய்ய, 'டிக்கெட்' முன்பதிவு செய்திருந்தார்.இந்நிலையில், மாலை, 6:13 வரை, எம்.எல்.ஏ., வராததால், விமானத்தின் கதவுகள், 6:18க்கு மூடப்பட்டு, 6:30க்கு விமானம் புறப்பட்டு சென்றது.அதன் பிறகு வந்த வினோத், விமானம் புறப்பட்டு சென்றதை அறிந்து ஆத்திரம் அடைந்தார். அங்கிருந்த, ஏர் இந்தியா நிறுவனத்தின் பெண் ஊழியரை, மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார். அவரது மொபைல் போனை பறித்து, அதிலிருந்து, நிலைய மேலாளரிடம் பேசிவிட்டு, போனை திரும்ப தர மறுத்தார். இதனால், பெண்ஊழியர் அதிர்ச்சி அடைந்தார்.
தாமதம்

இந்த சம்பவம் குறித்து, எம்.எல்.ஏ., வினோத் சந்திரகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:விமான நிலையத்திற்கு, மாலை, 5:30 மணிக்கே நான் வந்துவிட்டேன். பாதுகாப்பு சோதனையில், என்னுடைய பைகளையும், என் உதவியாளர் பைகளையும், இரண்டு முறை சோதனையிட்டனர். அதில்,தாமதமாகிவிட்டது. ஏர் இந்தியாவைச் சேர்ந்த பெண் ஊழியர், என்னை பார்த்து கடுமையாக சத்தம் போட்டார். நாங்கள் விமானத்தில் ஏற அனுமதி மறுத்தார். அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை, அதிகாரிகள் சோதனையிட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர், தனஞ்ஜெய் குமார் கூறுகையில், ''இவ்விவகாரம் குறித்து, தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் இறுதியில், யார் மீது தவறு என்பதை அறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

மூலக்கதை