கத்தாருடன் டிரா செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பயிற்சியாளர் இகோர் உற்சாகம்

தினகரன்  தினகரன்
கத்தாருடன் டிரா செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பயிற்சியாளர் இகோர் உற்சாகம்

தோஹா: பிபா உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில், ஆசிய சாம்பியனான கத்தார் அணியுடன் டிரா செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாச் கூறியுள்ளார். தோஹாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த விறுவிறுப்பான இப்போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறியதை அடுத்து 0-0 என டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி கிடைத்தது. இது குறித்து இந்திய அணி பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாச் (குரோஷியா) கூறியதாவது: முதல் போட்டியில் ஒமான் அணியுடன் போராடி தோற்றது மிகுந்த ஏமாற்றமளித்தது. ஆனால், ஒரு பயிற்சியாளராக அதைப் பற்றியே யோசித்து நேரத்தை  வீணடிக்க முடியாது. இரண்டாவது போட்டியில் ஆசிய சாம்பியனுக்கு எதிராக டிரா செய்து ஒரு புள்ளியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.இன்னும் சில விஷயங்களில் முன்னேற்றம் தேவை. இரு அணி வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது அனைவருக்கும் மிகச் சிறந்த அனுபவம். இந்திய வீரர்கள் குறித்து பெருமை கொள்கிறேன். அதே சமயம் ஒரு  புள்ளி பெற்றதுடன் திருப்தி அடைந்துவிடக் கூடாது. அடுத்த போட்டியில் இதை விட சிறப்பாக விளையாட வேண்டும். வீரர்களின் உடல்தகுதி பற்றிய விமர்சனங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. நாங்கள் ஒரு நல்ல தகுதிவாய்ந்த அணி என்பதை நிரூபித்துள்ளோம். கத்தாருக்கு எதிராக கடைசி நிமிடங்களில் கூட இந்திய வீரர்கள் துடிப்புடன் விளையாடி  தாக்குதல் நடத்தியதே இதற்கு சாட்சி.இவ்வாறு இகோர் கூறியுள்ளார். இந்திய அணி தனது 3வது தகுதி சுற்று ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் அக்டோபர் 15ம் தேதி மோதுகிறது. கொல்கத்தாவில் நடைபெற உள்ள இப்போட்டியைக் காண 80,000 ரசிகர்கள் திரண்டு இந்திய  அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் இகோர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை