ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல் தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது பற்றி விவாதிக்க வேண்டும்

தினகரன்  தினகரன்
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தல் தலிபான்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது பற்றி விவாதிக்க வேண்டும்

ஐ.நா: தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானின் எல்லை கடந்து கிடைக்கும் ஆதரவு, புகலிடம் கிடைப்பது பற்றி ஐநா. கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் இந்தியா  வலியுறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள தனது படையை வாபஸ் பெற முடிவு செய்துள்ள அமெரிக்கா, தலிபான் தீவிரவாத அமைப்புடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில், முதல்கட்டமாக 5 ஆயிரம் அமெரிக்க வீரர்களை வாபஸ் பெற  சம்மதிக்கப்பட்டது.  ஆனால், ஆப்கானிஸ்தானில் நடக்க உள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் வகையில், தலிபான் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதனால், இந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ‘இந்த சமரச பேச்சுவார்த்தை செத்து விட்டது’ என அமெரிக்க அதிபர்  டிரம்ப் நேற்று முன்தினம் அறிவித்தார்.இந்நிலையில், ஐநா. பாதுகாப்பு கவுன்சிலின்  42வது  கூட்டம் நியூயார்க் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.  இதில், ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் அக்பருதீன்  பேசியதாவது: கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் தேர்தல்  அச்சுறுத்தல் உள்பட பல்வேறு தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன. இது,  தலிபான்கள் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் அடைந்து  வந்த நிலையில்  முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.  தலிபான்கள்,  ஹக்கானி, அல் கொய்தா, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட தீவிரவாத  அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தான் எல்லை கடந்து (பாகிஸ்தானில்) கிடைக்கும் ஆதரவு, புகலிடம்  ஆகியவை பற்றியும் விவாதிக்க  வேண்டும். இந்தியாவும் தீவிரவாதத்தினால்  பாதிக்கப்பட்டுள்ளதால், அதன் நட்பு நாடான ஆப்கானிஸ்தான், தற்போது  தீவிரவாதத்தினால் அனுபவித்து வரும் துயரங்களையும் வேதனைகளையும் புரிந்து  கொண்டுள்ளது. எனவே, `ஜனநாயகத்தை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்ட  திருத்தம், அரசியல் தீர்வு ஆகியவையே நிலையான நிரந்தரமான மாற்றம்  ஏற்படுவதற்கான வழியாகும்’ என்று ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ கட்டரெஸ்  கூறுவதை  இந்தியா ஆதரிக்கிறது.தங்களது நாட்டின் பிரச்னைக்கு  அமைதியான தீர்வு காண, ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த அந்நாடு முற்படும்  போது, நாம் அதனை ஆதரிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகத்தை  ஆதரித்து வலுப்படுத்தி உள்ளனர். ஓர் அரசியலமைப்பை உருவாக்கி,  நலத்திட்டங்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் ஆகியவை  ஊக்குவிக்கப் பட்டுள்ளன. இவை  அனைத்தையும் செய்த இவர்களால் தீவிரவாத  அச்சுறுத்தலை எதிர் கொள்ள முடியாதா?.ஆப்கானிஸ்தானுக்கு  புதிய விடியல் கிடைக்கும் என நம்புவோம். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, அமைதி  நடவடிக்கையை முன்னிறுத்தி, இந்த மண்டலத்திலும் இதனை தாண்டிய பகுதிகளில்  உள்ள நாடுகளுடனும் இணைந்து  பணியாற்ற இந்தியா தயாராக இருக்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக கூட்டம்காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், இம்மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் பிரதமர் மோடி சமீபத்தில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இமரான்கான் கடும்  எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை பெறவும் தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், அது தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து,  `காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்’ என்ற தோற்றத்தை ஏற்படுத்த, பாகிஸ்தானில் காஷ்மீர் நேரம் கடைப்பிடித்தார். இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைநகரான முசாபர்பாத்தில் நாளை,  காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொதுகூட்டத்தை அவர் நடத்துகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் `காஷ்மீரில் இந்திய படைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. எனவே, காஷ்மீர் மக்களுக்கு  பாகிஸ்தான் ஆதரவாக இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் செப்டம்பர் 13ல் முசாபர்பாத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.

மூலக்கதை