விலை சரிவு; மானியம் நிறுத்தம் பட்டுக்கூடு தொழிலை கைவிட்ட விவசாயிகள்

தினகரன்  தினகரன்
விலை சரிவு; மானியம் நிறுத்தம் பட்டுக்கூடு தொழிலை கைவிட்ட விவசாயிகள்

கோபி:  தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈரோடு மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாகவே முதலிடத்திலும் திருப்பூர் மாவட்டம் 2ம் இடத்திலும் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 7  ஆயிரம் ஏக்கரில் மல்பெரி பயிரிட்டு பட்டுக்கூடு உற்பத்தி செய்கின்றனர். ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்ய சராசரியாக 250 முதல் 300 வரை செலவாகும்.  இரண்டு மாதம் முன்பு ஒரு கிலோ பட்டுக்கூடு 325 வரை விற்றது. தற்போது ₹300 வரை தான் விலைபோகிறது. இதனால் நஷ்டம் அடைந்த விவசாயிகள் விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தியை கைவிட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழக பட்டுக்கூடு உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் சண்முகசுந்தரமூர்த்தி கூறுகையில், ‘‘கடந்த ஆண்டுக்கு முன்பு வரை ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்திக்கு தமிழக அரசு 10 ஊக்கத்தொகையாக வழங்கி வந்தது.  தற்போது அந்த ஊக்கத்தொகையையும் நிறுத்தி விட்டது. இதனால் கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது.  அதே நேரத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ஒரு கிலோ உற்பத்திக்கு 50 முதல் 75 வரை அந்த மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 60 சதவீத விவசாயிகள்  பட்டுக்கூடு உற்பத்தியை நிறுத்திவிட்டனர் என்றார்.

மூலக்கதை