குறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின்: முதல்வர் காட்டம்

தினமலர்  தினமலர்
குறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின்: முதல்வர் காட்டம்

கோவை: ''எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு குறை சொல்வது ஒன்று தான் நோக்கம்; குறுகிய மனம் படைத்தவர் அவர்'' என முதல்வர் பழனிசாமி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் நேற்று அவர் கூறியதாவது: வெளிநாட்டு முதலீடு ஈர்த்தது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட ஸ்டாலின் கோரியுள்ளார். அவர்களது ஆட்சி காலத்தில் வெறும் 26 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் ஜெ. முதல்வராக இருந்தபோது 2015ம் ஆண்டில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் ஈர்த்துள்ளார். 53 ஆயிரம் கோடி ரூபாயில் 27 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 67 தொழில் நிறுவனங்கள் தொடங்கும் நிலையில் உள்ளன.

பெரிய தொழில் தொடங்க குறைந்தது ஐந்து ஆண்டுகள் வரை ஆகும். இது கூட தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் உள்ளார். நான் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கு குறைசொல்வது ஒன்று தான் நோக்கம். நான் வெளிநாடு சென்றபோது 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. 8835 கோடி ரூபாய் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் முன்வந்துள்ளனர். 35 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

எந்த திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்தி விட முடியாது. வெள்ளை அறிக்கை வெளியிட்டால் பாராட்டுவதாக கூறும் அவர் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டு தான். குறுகிய மனம் படைத்தவர் ஸ்டாலின். வெளிநாடுகளில் இருப்பது போல ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை இங்கும் செயல்படுத்த உள்ளோம். தமிழகத்தில் பொருளாதார நெருக்கடி இல்லை. புதிய தொழில்கள் துவங்க உகந்த மாநிலம் தமிழகம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை