டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு! ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் ஜாமின் கேட்கிறார்

தினமலர்  தினமலர்
டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு! ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில் ஜாமின் கேட்கிறார்

'ஐ.என்.எக்ஸ். மீடியா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் ஜாமின் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் நீதிமன்ற காவல் உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார். இதற்கிடையில் இந்த முறைகேடு தொடர்பாக சிதம்பரத்தின் முன்னாள் செயலர் கே.வி.பெருமாளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அன்னிய முதலீடு பெறுவதற்கு 2007ல் காங். தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டது. காங். மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டால் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சிதம்பரத்தை கடந்த மாதம் 21ல் சி.பி.ஐ. கைது செய்தது. அதன் பின் சி.பி.ஐ. அதிகாரிகள் ஐந்து தவணைகளில் சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணைக்குப் பின் 5ம் தேதியில் அவர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்; அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிதம்பரம் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 5ம் தேதி நடந்த விசாரணையின் போது இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையிடம் சரண் அடைய தயாராக இருப்பதாக கூறி சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு குறித்து 12-ம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கும் என தெரிகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஜாமின் வழங்கக் கோரி ஒரு மனுவும் சி.பி.ஐ. நீதிமன்றம் விதித்த நீதிமன்ற காவலை ரத்து செய்யக் கோரி ஒரு மனுவும் டில்லி உயர் நீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர் அர்ஷ்தீப் சிங் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன் நான் சமூகத்தில் எனக்கு மதிப்பு மரியாதை உள்ளது. அதனால் நான் தப்பிவிடுவேன் ஆவணங்களை திருத்திவிடுவேன் சாட்சிகளை கலைத்துவிடுவேன் என கூறப்படுவதை ஏற்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் என முதலில் இருந்தே கூறி வருகிறேன். எனக்கு ஜாமின் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் உத்தரவுகளை பின்பற்ற தயாராக உள்ளேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி சிதம்பரம் தாக்கல் செய்த மனுஅரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் சொல்படியே சி.பி.ஐ. செயல்பட்டு வருகிறது. 15 நாள் காவலில் சி.பி.ஐ. என்னை முழுமையாக விசாரித்து விட்டது. அப்படியிருந்தும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் எனக்கு நீதிமன்ற காவல் விதித்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும், என்றார். நீதிபதி சுரேஷ் கைத் முன்னிலையில் இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிதம்பரத்தின் முன்னாள் செயலர் கே.வி.பெருமாள் என்பவரிடம் இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் அவர் 'அப்ரூவராக' மாறுவார் என சி.பி.ஐ. எதிர்பார்க்கிறது.

சி.பி.ஐ., விசாரணை வளையத்தில் பெருமாள்:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்தின் முன்னாள் தனிச் செயலரை துருப்புச் சீட்டாக மாற்ற அவரை விசாரிக்கும் நடவடிக்கையில் சி.பி.ஐ. இறங்கியுள்ளதால் டில்லி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தற்போது திஹார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் முக்கிய வாதமே ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜியை தான் சந்திக்கவில்லை என்பது தான். ஆனால் மகளை கொலை செய்த வழக்கில் மும்பை சிறையில் உள்ள இந்திராணியோ சிதம்பரத்தை சந்தித்தது உண்மை என கூறியுள்ள நிலையில் வழக்கின் முக்கிய முடிச்சே இந்த சந்திப்பு நடந்ததா இல்லையா என்பதில் தான் அடங்கியுள்ளது.

சி.பி.ஐ. இந்த சந்திப்பை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினால் மட்டுமே சிதம்பரத்தின் மீதான வழக்கு விசாரணை வேகமெடுக்கும். இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் சிதம்பரத்தின் முன்னாள் தனிச் செயலரான கே.வி.பெருமாள் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. டில்லியிலேயே வசித்து வரும் தமிழரான இவர் சிதம்பரத்திடம் 2004 முதல் 2010 வரை தனிச் செயலராக இருந்தார். இவர் சிதம்பரத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளும் புறமும் அறிந்தவர் என்பது அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பெருமாளிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளதாக தெரிகிறது. டில்லியில் நிதி அமைச்சகம் இருக்கும் நார்த் பிளாக்கில் சிதம்பரம், இந்திராணி இடையேயான சந்திப்பை ஏற்படுத்தி தந்த நபர் யார் என்பது தான் சி.பி.ஐ.யின் ஒரே கேள்வி. அதற்கான பதில் பெருமாள் தான் என சி.பி.ஐ. உறுதியாக நம்புகிறது. கார்த்தி அறிவுறுத்தலின் படி பெருமாள் தான் சிதம்பரம், -இந்திராணி சந்திப்பை ஏற்பாடு செய்தார் என சி.பி.ஐ. சந்தேகிக்கிறது.

இதனால் பெருமாளை வளைத்து விட்டால் சிதம்பரத்தின் வாதத்தை எடுபடாமல் செய்துவிடலாம் என்பதாலேயே இந்த வளைப்பு படலம் துவங்கியிருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. தாங்கள் அழைக்கும்போது நேரில் வர வேண்டுமென்றும் டில்லியை விட்டு எங்கும் செல்ல வேண்டாமென்றும் பெருமாளுக்கு சி.பி.ஐ. உத்தரவிட்டுள்ளது. விரைவில் 'சம்மன்' அனுப்பி பெருமாளிடமிருந்து வாக்குமூலம் பெற சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதால் டில்லி வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

நாட்டை மீட்கும் திட்டம் எங்கே?

'பொருளாதார சரிவிலிருந்து நாட்டை மீட்கும் திட்டம் எங்கே' என சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தன் குடும்பத்தினர் உதவியுடன் 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: என் சார்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட என் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டேன். நீதி மற்றும் அநீதியை வேறுபடுத்திப் பார்க்கும் ஏழைகளின் திறனைக் கண்டு வியப்படைகிறேன். பொருளாதார சரிவால் ஏழைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

குறைந்த வருமானம், குறைவான வேலை வாய்ப்புகள், குறைந்த வர்த்தகம், குறைந்த முதலீடு ஆகியவை ஏழைகளையும் நடுத்தர மக்களையும் பாதிக்கின்றன. இந்த சரிவு மற்றும் இருளில் இருந்து நாட்டை காப்பாற்றும் திட்டம் எங்கே? இவ்வாறு 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

- நமது டில்லி நிருபர் -

மூலக்கதை