போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் குறையுமா? 'மாநில அரசுகளே முடிவு செய்யலாம்' என்கிறார் கட்கரி!

தினமலர்  தினமலர்
போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் குறையுமா? மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்கிறார் கட்கரி!

புதுடில்லி: போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபாரதம் விதிக்கப்படுவது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ''போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்களால், விபத்து நிகழ்ந்து, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுப்பதற்காக, மத்திய அரசு, சமீபத்தில், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய சட்டத்தை, பார்லிமென்டில் நிறைவேற்றியது. இந்த புதிய சட்டப்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு, கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச அபராத தொகை, 100 ரூபாயிலிருந்து, 1,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக, ஏற்கனவே இருந்த அபராத தொகையை விட, தற்போது, 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி எழுந்துள்ளது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், நாட்டின் பல பகுதிகளிலும், வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கமாகியுள்ளது.

அதிருப்தி:

அபராத தொகை அதிகம் உள்ளதால், வாகன ஓட்டிகள், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அரசு, தனக்கான வருவாயை பெருக்குவதற்கு தான், அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. இதையடுத்து, குஜராத்தில், அபராத தொகை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது; இதை, மற்ற மாநில அரசுகளும் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி, டில்லியில் நேற்று கூறியதாவது: சாலை போக்குவரத்தில் ஒழுங்குமுறையை ஏற்படுத்தவும், உயிரிழப்பை தடுக்கவும் தான், அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக, அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுவது, தவறான தகவல். மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தாலும், அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத தொகையை அப்படியே பின்பற்றுவதா, குறைப்பதா என்பதை, சம்பந்தபட்ட மாநில அரசுகளே முடிவு செய்யலாம். இந்த விவகாரத்தில், மத்திய அரசு தலையிடாது.

மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன். உலகிலேயே, சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்றாக, நம் நாடு உள்ளது. ஆண்டுக்கு, ஐந்து லட்சம் விபத்துகள் நடக்கின்றன. இவற்றில், 1.5 லட்சம் பேர் இறக்கின்றனர். விபத்துகள் அதிகம் நடப்பதற்கு, சாலை கட்டுமானம், வாகனங்கள் தொடர்பான கோளாறுகள் என, பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக இருப்பது, போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தான். இதை தவிர்ப்பதற்காகவே, அபராதம் அதிகரிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

குஜராத்:

முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் குஜராத்தில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை, கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் இன்றி, இரு சக்கர வாகனம் ஓட்டினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கும்படி, புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், குஜராத்தில், 500 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்துள்ளவர், ஹெல்மெட் போடாவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்க, புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில், இந்த விதிமுறை பின்பற்றப்படாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனத்தில், மூன்று பேர் பயணித்தால், புதிய சட்டப்படி, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆனால், குஜராத்தில், 100 ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படும். இதுபோல், அனைத்து விதிமீறல்களுக்கும், புதிய சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை, குஜராத்தில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை, வரும், 16ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம்:

குஜராத்தில், மோட்டார் வாகன சட்ட விதிகளின் கீழ் வசூலிக்கப்படும் அபராதம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, கர்நாடக மாநில அரசும் இதே முறையை பின்பற்ற, ஆலோசித்து வருகிறது. கேரள அரசும், போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை குறைப்பதற்கான ஆலோசனைகளை துவக்கியுள்ளது. இதற்கிடையே, மோட்டார் வாகன சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அபராத தொகையை குறைக்க வலியுறுத்தியும், டில்லியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டின் முன், காங்கிரஸ் கட்சியினர், நேற்று போராட்டம் நடத்தினர்.

மூலக்கதை