20 ஆண்டில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை; 'காவிரி கூக்குரல்' பயணத்தில் சத்குரு வேதனை

தினமலர்  தினமலர்
20 ஆண்டில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை; காவிரி கூக்குரல் பயணத்தில் சத்குரு வேதனை

ஓசூர்: ''இந்தியாவில், 20 ஆண்டுகளில், 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்,'' என, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு பேசினார்.


காவிரி நதிக்கு புத்துயிரூட்ட, 'காவிரி கூக்குரல்' என்ற இயக்கத்தை, 'ஈஷா' அறக்கட்டளை நிறுவனர் சத்குரு துவக்கியுள்ளார். இயக்கத்தில், இரு மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக, தலைக்காவிரி முதல் சென்னை வரை, பைக் பயணம் மேற்கொண்டுள்ளார்.


செப்., 3ல், தலைக்காவிரியில் புறப்பட்ட அவர், ஹன்சூர், மைசூரு, மாண்டியா, பெங்களூரு உட்பட பல்வேறு ஊர்கள் வழியாக, நேற்று தமிழகம் வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதியமான் பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி, எம்.பி., செல்லகுமார், ஓசூர், எம்.எல்.ஏ., சத்யா, லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.


போர்:


சத்குரு பேசியதாவது: தமிழ் மண்ணில், 'காவிரி கூக்குரல்' முதல் படியை, ஓசூரில் வைத்துள்ளோம். இது, இன்னொரு மரம் வைக்கும் இயக்கம் அல்ல. நாட்டு பிரச்னை என்ன என்பதை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த, 20 ஆண்டுகளில், நமக்கு உணவு கொடுக்கும், 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 70 ஆண்டுகளில், இந்தியாவில் நடந்த நான்கு போர்களில் கூட, 3 லட்சம் பேர் இறக்கவில்லை. காவிரி படுகையில், 12 ஆண்டுகளில், மொத்தம், 47 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

கடந்த, 100 ஆண்டுகளில், ஒரு சில ஆண்டுகளை தவிர, நல்ல மழை பெய்துள்ளது. மழை நீர் பூமியில் இறங்காமல் ஓடி விட்டது. வெள்ளம் வந்த பகுதியில், சில மாதங்களில் வறட்சி ஏற்படுகிறது. விவசாயி கையில், 80 சதவீதம் நிலம் உள்ளது. அங்கு தான் மரம் வைக்க முடியும். 87 சதவீத காவிரி வடிநில பகுதிகளில், மரங்களை எடுத்து விட்டோம். நமக்கு பிரச்னையும் தெரியும்; தீர்வும் தெரியும். யாராவது செய்யட்டும் என, இருந்து விடுகிறோம். காவிரி வடிநில பகுதியில், மூன்றில் ஒரு பங்கு மரங்கள் வளர்க்க வேண்டும்.


அரசுகள் உறுதி:


தமிழக, கர்நாடகா மாநில அரசுகள், முதல் நான்கு ஆண்டுகள், மரம் வளரும் வரை, விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளன. 'காவிரி கூக்குரல்' என்பது, 100 ஆண்டுகளில் நடக்க வேண்டிய, 242 கோடி மரங்களை, மூன்று ஆண்டுகளில் நட்டு வளர்த்தால், 12 ஆண்டுகளில், காவிரியாற்றில் தண்ணீர் பார்க்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர், பாலகிருஷ்ணாரெட்டி, 1 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு, 5 லட்சம் ரூபாய் காசோலையை, சத்குருவிடம் வழங்கினார்.

மூலக்கதை