கொளத்தூர் கிராமத்தில் பாதியில் நின்ற பேருந்து நிழற்குடை பணி: ஊழல் முறைகேடா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொளத்தூர் கிராமத்தில் பாதியில் நின்ற பேருந்து நிழற்குடை பணி: ஊழல் முறைகேடா?

செய்யூர்: சித்தாமூர் அருகே கொளத்தூரில் மக்களவை தேர்தலுக்கு முன் ₹5 லட்சத்தில் பேருந்து நிழற்குடை அமைக்கும் பணி, ஊழல் முறைகேட்டினால் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டதா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மதுராந்தகம் ஒன்றியம், சரவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இக்கிராமத்தின் வழியாக மதுராந்தகத்தில் இருந்து செய்யூர் வரை ஒரே ஒரு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இக்கிராம மக்களின் வசதிக்காக, முன்னாள் அதிமுக எம்பி மரகதம் குமரவேலின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், கடந்த 8 மாதங்களுக்கு முன் ₹5 லட்சத்தில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

பின்னர் மக்களவை தேர்தலில் அக்கட்சி தோல்வி அடைந்தது.

இதனால் இங்கு நிழற்குடை அமைக்கும் பணிகள் 30 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது இந்த நிழற்குடை மக்களிடையே பரிதாபமாக காட்சியளிக்கிறது. கொளத்தூர் கிராமத்தில் பாதியில் நின்றுபோன நிழற்குடை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், அந்த நிழற்குடை அமைப்பதில் ஏராளமான ஊழல் முறைகேடுகள் நடந்ததாகவும், அதுதொடர்பான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. எனவே, கொளத்தூர் கிராமத்தில் அரைகுறையாக நிறுத்தப்பட்ட பேருந்து நிழற்குடை பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை