சாலையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் மீது பைக் மோதி வட்டார வளர்ச்சி அதிகாரி பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாலையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் மீது பைக் மோதி வட்டார வளர்ச்சி அதிகாரி பலி

கோவில்பட்டி: சாலையோரம் பழுதாகிநின்ற கன்டெய்னர் மீது பைக் மோதியதில் வட்டார வளர்ச்சி அதிகாரி பலியானார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலம் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் காசிராஜ் (45).

இவர் விளாத்திகுளத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று பணி முடிந்ததும் மாலை 6 மணி அளவில் பைக்கில் ஊருக்கு சென்றார்.

கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளம் பகுதியில் வரும் போது போதிய வெளிச்சம் இல்லாத நிலையில், அங்கு பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது அவரது பைக் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காசிராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

கோவில்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர் விருதுநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் காளிராஜ்(35) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த காசிராஜிக்கு பெரிய சமுத்திர கனி(38) என்ற மனைவியும்  பரணி குமாரி(18), முகிலரசி(13) ஆகிய மகள்களும் அருண் பிரசாத்(3) என்ற மகனும் உள்ளனர்.

.

மூலக்கதை