வீரர்கள் போகாததற்கு இந்தியாதான் காரணமா? பாக். அமைச்சர் சொல்வது பொய்: இலங்கை அமைச்சர் தடாலடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீரர்கள் போகாததற்கு இந்தியாதான் காரணமா? பாக். அமைச்சர் சொல்வது பொய்: இலங்கை அமைச்சர் தடாலடி

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணி, வரும் 27ம் தேதி தொடங்கி, அக்டோபர் 9ம் தேதி வரை பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாட திட்டமிடப்பட்டது. ஆனால், இதில் இலங்கை கேப்டன் மலிங்கா, ஏஞ்சலா மேத்யூஸ் உள்ளிட்ட 10 வீரர்கள் இத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் பாகிஸ்தானில் அரசியல் ரீதியிலான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபாவத் ஹுசைன் தனது டுவிட்டரில், ‘எனக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பாகிஸ்தானுக்கு செல்லும் இலங்கை வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று இலங்கை வீரர்களை இந்தியா மிரட்டியுள்ளது. இந்தியாவின் விளையாட்டுத்துறையினரின் இதுபோன்ற செயல் மிகவும் கீழ்த்தரமானது, விண்வெளித்துறை முதல் விளையாட்டுத்துறை வரை பாகிஸ்தானுடன் இந்தியா மல்லுக்கட்டி வருகிறது, இது கண்டிக்கத்தக்கது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இலங்கை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ கூறுகையில், ‘ஏற்கனவே 2009ல் இலங்கை வீரர்கள் பாகிஸ்தானுக்கு விளையாட சென்ற போது, அவர்கள் தாக்கப்பட்டனர்.

அந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே தற்போது வீரர்கள் அந்நாட்டுக்கு சென்று விளையாட மறுத்துள்ளனர். பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் சொல்வது போல், இந்தியாவின் மிரட்டலுக்கு இலங்கை பணிந்ததாக கூறுவது பொய்.

அடிப்படை ஆதாரமற்றது. அதில், எந்த உண்மையும் இல்லை’ என்றார்.

ஐபிஎல் தொடரில், இலங்கை வீரர்கள் பெரியளவில் ஏலத்திலேயே எடுக்கப்படுவதில்லை என்பது பாகிஸ்தான் அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

பாகிஸ்தானில் விளையாட மறுத்துள்ள வீரர்களில் கூட மலிங்காவைத் தவிர வேறு எவரும் கடந்த 2019 ஐபிஎல் சீசனில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை