திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 30ம்தேதி கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் முகூர்த்த கோலாகலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 30ம்தேதி கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் முகூர்த்த கோலாகலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்தாண்டு தீபத்திருவிழா வரும் டிசம்பர் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும். தீப விழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக வரும் 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும்.

அன்றைய தினம் அதிகாலை 5. 30 மணிக்கு மேல் 7. 05 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தமும் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறும். பந்தக்கால் முகூர்த்தத்தை தொடர்ந்து, தீபத்திருவிழா உற்சவத்தில் வலம் வரும் வாகனங்கள் சீரமைத்தல், பஞ்ச ரதங்களை பழுது நீக்கி பவனிக்கு தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நவராத்திரி விழா

அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா வரும் 29ம் தேதி தொடங்குகிறது.

முதல் நாள் இரவு 8 மணி அளவில், பராசக்தி அம்மன் அலங்கார ரூபத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து, திருவீதிஉலா நடைபெறும்.

2ம் நாள் (30ம் தேதி) ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், 3ம் நாள் (ஆக. 1) கெஜலட்சுமி அலங்காரத்திலும், 4ம்நாள் (2ம்தேதி) மனோன்மணி அலங்காரத்திலும், 5ம் நாள் (3ம் தேதி) ரிஷப வாகனத்திலும் பராசக்தி அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

6ம்நாள் (4ம் தேதி) ஆண்டாள் அலங்காரத்திலும், 7ம்நாள் (5ம் தேதி) சரஸ்வதி அலங்காரத்திலும், 8ம்நாள் (6ம் தேதி) லிங்கபூஜை அலங்காரத்திலும் 9ம்நாள் (7ம் தேதி) மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும் அம்மன் எழுந்தருள்வார். அன்று மாலை, உண்ணாமுலையம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும்.

வரும் 8ம் தேதி விஜயதசமியன்று காலை, திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மன், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெறும்.

அன்றைய தினம் துர்கையம்மன், பச்சையம்மன் கோயிலிலும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

.

மூலக்கதை