வீட்டுவாசலில் அத்தப்பூ கோலம் ஓணம் பண்டிகை கோலாகலம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வீட்டுவாசலில் அத்தப்பூ கோலம் ஓணம் பண்டிகை கோலாகலம்

நாகர்கோவில்: கேரளாவில் ஒணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீட்டின் முன் அத்தப்பூ கோலமிட்டிருந்தனர்.

கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர், தனது நாட்டை காண வரும்போது மக்கள் அனைவரும் சந்தோஷத்துடனும், செல்வ செழிப்புடனும் அவரை வரவேற்பதாக ஓண விழா கொண்டாடப்படுகிறது. ‘காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடணும்’ என்பது மலையாள பழமொழி.

அதாவது ஏழைகளாக இருந்தாலும் வீட்டில் சேகரித்து வைத்திருக்கின்ற தானியங்களில் ஏதாவது ஒன்றை விற்றாவது ஓணப்பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதாகும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி 10வது நாள் திருவோணம் நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும்.

இன்று ஓணம் பண்டிகை கேரளாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், அருமனை மற்றும் களியக்காவிளை உள்பட மாவட்டம் முழுவதும் ஓணம் கொண்டாட்டங்கள் களை கட்டி இருந்தன.

பல்வேறு மலர்களால் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு இருந்தனர். வீடுகளில் ஊஞ்சல் கட்டி இளம்பெண்களும், குழந்தைகளும் ஓண பாட்டுக்களை பாடி கதகளி நடனமாடி மகிழ்ந்தனர்.

ஆண்கள் பாரம்பரிய வேட்டி, சட்டை, பெண்கள் நேரியல் சேலைகள் அணிந்து, ஓணம் கொண்டாடினர். ஓணம் பண்டிகையில் ஓண விருந்து தான் மிக முக்கியமாகும்.

பல்வேறு காய்கறிகளுடன் கூடிய பதார்த்தங்கள் சமைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து, தாங்களும் குடும்பத்தினருடன் வீடுகளில் அமர்ந்து ஒருவருக்கொருவர் உணவு பரிமாறி மகிழ்ந்தனர்.

குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களிலும் ஓண பண்டிகையையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

பள்ளி, கல்லூரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் ஓணம் விழா நடைபெற்றது. பெண்கள், மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

இன்று ஓணம் விடுமுறையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் ஏராளமானவர்கள் குவிந்தனர். கன்னியாகுமரியில் காலை முதல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது.

காலை சூரிய உதயத்தை காண, கேரள மக்கள் பெருமளவில் திரண்டு இருந்தனர். திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

இதுபோல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வசித்துவரும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

.

மூலக்கதை