திருவள்ளூர் அருகே நெய்வேலி கிராமத்தில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவள்ளூர் அருகே நெய்வேலி கிராமத்தில் 15 பேருக்கு டெங்கு காய்ச்சல்: மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நெய்வேலி கிராமத்தில் 4 பெண்கள் உட்பட 15 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர. இதனால் மருத்துவமனையில் ஏராளமானோர் காய்ச்சலால் குவிந்த வண்ணம் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் பல இடங்களில் தண்ணீர் வெளியேற முறையான வடிகால் இன்றி தேங்கி நிற்கிறது.

மாவட்டத்தின் பல ஊர்களில் தெருக்கள் சகதியாக மாறி சேற்றுக்குட்டை போல் காட்சியளிக்கிறது. இது கொசு உற்பத்திக்கு ஏற்ற சூழலை உருவாக்கியுள்ளது.

இதனால், இம்மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 15 நாட்களாக திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தவண்ணம் உள்ளனர்.

குறிப்பாக, பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட நெய்வேலி ஊராட்சியில் அன்னை சத்யா நகரில் மட்டும், சுகந்தி (24), ஆனந்தி (18), யேசுமணி (48) உட்பட 15 பேருக்கு டெங்கு காய்ச்சல் உள்ளது. இதில், 3 பேர் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அர்னீஷ் (2) என்ற சிறுவனும் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 200க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

இவ்வாறு, நோயாளிகளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது பொது மக்களிடையே டெங்கு காய்ச்சல் குறித்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ முகாம்: பருவநிலை  மாறுபாட்டால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் காய்ச்சல், சளி போன்ற உடல்  உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் உட்பட அனைத்து அரசு  மருத்துவமனைகளிலும், சிகிச்சை பெறவும், ரத்தப்பரிசோதனை செய்துகொள்ளவும்,  காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அதிகளவு காணமுடிகிறது.

எனவே,  சுகாதார துறையினர் காய்ச்சல் அதிகமுள்ள பூண்டி ஒன்றியம் நெய்வேலி  ஊராட்சியில்,மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அங்கேயே ரத்தப்பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

.

மூலக்கதை