பிளேஆப், எலிமினேட்டர், அரையிறுதி தொடர்ந்து அக். 19ல் புரோ கபடி லீக் இறுதிபோட்டி: நேற்றிரவு போட்டியில் யு மும்பா அபாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிளேஆப், எலிமினேட்டர், அரையிறுதி தொடர்ந்து அக். 19ல் புரோ கபடி லீக் இறுதிபோட்டி: நேற்றிரவு போட்டியில் யு மும்பா அபாரம்

கொல்கத்தா: புரோ கபடி லீக் போட்டியின் 7வது சீசன் ஆட்டங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் - யு மும்பா அணிகள் மோதின.

போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் பொறுப்புடன் விளையாடின. முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 15 - 15 என சமனிலை வகித்தன.

ஆனால், இரண்டாவது பாதியில் யு மும்பா அணியினர் அதிரடியாக ஆடினர். இறுதியில், யு மும்பா அணி 41 - 27 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் யு மும்பா அணி 5ம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புரோ கபடி லீக் சீசன் இறுதி ஆட்டம் வரும் அக்டோபர் 19ம் தேதி அமதாபாதில் நடைபெறும் என்று அமைப்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, பிளே ஆப், இரண்டு எலிமினேட்டர்கள், அரையிறுதி ஆட்டங்கள், இறுதி ஆட்டம் அனைத்தும் அமதாபாதிலேயே நடைபெறும்.

அக்டோபர் 14ல் இரண்டு எலிமினேட்டர்கள் ஆட்டமும், 16ம் தேதி இரண்டு அரையிறுதி ஆட்டங்களும் நடைபெறும். 19ம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

மொத்தம் 12 அணிகளில் 59 புள்ளிகளுடன் தபாங் டெல்லி அணி முதலிடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை