பண பரிவர்த்தனை முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் சிவகுமார் கைதை கண்டித்து பெங்களூருவில் பிரமாண்ட கண்டன பேரணி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பண பரிவர்த்தனை முறைகேடு புகாரில் முன்னாள் அமைச்சர் சிவகுமார் கைதை கண்டித்து பெங்களூருவில் பிரமாண்ட கண்டன பேரணி

பெங்களூரு: முறைகேடாக பணம் பரிவர்த்தனை செய்தது தொடர்பான புகாரில் முன்னாள் அமைச்சர் டி. கே. சிவகுமாரை மத்திய அமலாக்கத்துறை கைது செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக மாநில ஒக்கலிக சங்கத்தின் சார்பில் பெங்களூருவில் பிரமாண்ட கண்டன பேரணி நடந்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 7ம் தேதி முன்னாள் அமைச்சர் டி. கே. சிவகுமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகம், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே சமயத்தில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருந்த ரூ. 8. 59 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது ஹவாலா பணம் என்று ஐடி அதிகாரிகள் தீர்மானித்தனர்.
இது தொடர்பாக வருமான வரித்துறை மட்டுமில்லாமல், மத்திய அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.

இப்புகார் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி டி. கே. சிவகுமார் மட்டுமில்லாமல் புகாரில் தொடர்புடைய மேலும் பலருக்கு சம்மன் அனுப்பியது. சம்மனை ஏற்று கடந்த 30ம் தேதி டெல்லியில் உள்ள அமாலக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

நான்கு நாட்கள் சிவகுமாரிடம் விசாரணை நடத்திய பின், கைது செய்த அதிகாரிகள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 13ம் தேதி வரை விசாரணைக்கு எடுத்துள்ளனர். அவரிடம் கடந்த பத்து நாட்களாக தினமும் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் டி. கே. சிவகுமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராம்நகரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக காங்கிரஸ் மற்றும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் முழு அடைப்பு, தர்ணா, சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

சிவகுமாருக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் இரண்டு நாட்களாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில ஒக்கலிக சங்கம் சார்பில் டி. கே. சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும், முன்னாள் முதல்வர் எச். டி. குமாரசாமி உள்பட சில ஒக்கலிக வகுப்பு தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ய திட்டமிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூருவில் பிரமாண்ட கண்டன பேரணி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று கலை 10 மணிக்கு பெங்களூரு பசவனகுடியில் உள்ள நேஷனல் கல்லூரி மைதானத்தில் இருந்து சுதந்திர பூங்கா வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி பிரமாண்ட பேரணி நடந்தது.

ஆதிசுஞ்னகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்தநாதசுவாமி பேரணியை துவக்கி வைத்தார். இதில் மாநிலம் முழுவதில் உள்ள ஒக்கலிக மடத்தின் மடாதிபதிகள், சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஆயிரகணக்கானோர் கலந்துகொண்டனர்.

பெங்களூரு மட்டுமில்லாமல் பெங்களூரு ஊரக மாவட்டம், ராம்நகரம், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், துமகூரு, கோலார், சிக்கபள்ளாபுரா, சித்ரதுர்கா உள்பட பல மாவட்டங்களில் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் குவிந்தனர்.

பேரணியில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பேரணி செல்லும் பாதையில் மட்டுமில்லாமல் சுதந்திர பூங்கா, மகாராணி கல்லூரி, ஆளுநர் மாளிகை சாலை உள்ளிட்ட பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் 12 துணை போலீஸ் கமிஷனர்கள், 40 உதவி போலீஸ் கமிஷனர்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், 50 பெட்டாலின் கர்நாடக ஆயுதப்படை போலீசார் மற்றும் 40 சி. ஏ. ஆர்.

பெட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

கலவரம் நடந்தால் உடனடியாக கட்டுபடுத்த தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனம், கண்ணீர் புகை குண்டுகள் வீசும் வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது. மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தென்மண்டல போலீஸ் ஐஜிபி சரத்சந்திரா வழிகாட்டுதல் படி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

.

மூலக்கதை