ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு : சிபிஐயின் கைது நடவடிக்கை, நீதிமன்றக் காவலை எதிர்த்தும் தனியாக மனு தாக்கல்

தினகரன்  தினகரன்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு : சிபிஐயின் கைது நடவடிக்கை, நீதிமன்றக் காவலை எதிர்த்தும் தனியாக மனு தாக்கல்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். சிபிஐ-யின் கைது நடவடிக்கை மற்றும் நீதிமன்ற காவலை எதிர்த்தும் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைப்பு  மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெறுவதற்காக, ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, கடந்த 2007 ல் விதிமுறைகளை மீறி, அனுமதி அளிக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 21ம் தேதி கைது செய்த சிபிஐ மொத்தம் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இதையடுத்து முந்தைய விசாரணையில் நீதிபதி வெளியிட்ட உத்தரவில், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு வரும் 19ம் தேதிவரை அதாவது 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்படுகிறது. இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்படுவார். அமலாக்கத்துறை முன்பு சரண்டர் ஆவது குறித்து ப.சிதம்பரம் தாமாக முன்வந்து தாக்கல் செய்த மனுவில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும் அதுகுறித்த மனு மீதான விசாரணை, செப்டம்பர் 12ம் தேதி விசாரிக்கப்படும்’’ என்றார். இதையடுத்து ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜாமீன் வழங்கக்கோரி ப.சிதம்பரம் இன்று மனு தாக்கல்இந்நிலையில் ஐஎன்எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இதேபோல், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்தும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஐஎன்எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக இம்மாத இறுதியில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் ஐஎன்எக்ஸ் வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் முடிவு செய்துள்ளது. இதற்காக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை மனு தாக்கல் செய்யும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

மூலக்கதை