ஜேஇஇ- முதல்நிலை தேர்வு வினாத்தாள் மதிப்பீட்டில் மைனஸ் மார்க் நடைமுறையில் மாற்றம்

தினகரன்  தினகரன்
ஜேஇஇ முதல்நிலை தேர்வு வினாத்தாள் மதிப்பீட்டில் மைனஸ் மார்க் நடைமுறையில் மாற்றம்

டெல்லி: ஜேஇஇ முதல்நிலை தேர்வு வினாத்தாள் மதிப்பீட்டில் மைனஸ் மார்க் வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எனவே இவை ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.இதில் முதல்நிலை தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் 2 முறை நடத்தப்படுகிறது. இந்த 2 தேர்வுகளில் மாணவர்கள் பெறும் அதிக மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்நிலையில் வரும் ஆண்டில் முதல்நிலை ஜேஇஇ தேர்வு ஜனவரி மாதம் 6 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் nta.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட்கள் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.அதில் தேர்வு மையம், தேதி, நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இந்நிலையில் ஜேஇஇ முதல்நிலை தேர்வு வினாத்தாள் மதிப்பீடு நடைமுறைகளில் வரும் ஆண்டு முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை ஜேஇஇ முதல்நிலை தேர்வு எழுதுபவர்கள் வினாத்தாளில் இடம்பெற்றுள்ள கேள்விகளுக்கு தவறாக விடையளித்தால் அதற்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டு வினாத்தாளில் இடம்பெறும் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளுக்கு அளிக்கும் தவறான விடைகளுக்கு மட்டுமே இனி மதிப்பெண் குறைக்கப்படும்என கூறப்படுகிறது. கோடிட்ட இடத்தை நிரப்புக உட்பட இதர வடிவிலான கேள்விகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண் குறைக்கப்பட மாட்டாது. இதுகுறித்த விவரங்கள் என்டிஏ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை