பண மோசடி: நடிகர் பிரசாந்த் நாராயணன் மனைவியுடன் கைது

தினமலர்  தினமலர்
பண மோசடி: நடிகர் பிரசாந்த் நாராயணன் மனைவியுடன் கைது

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் பிரசாந்த் நாராயணன், ‛‛கேம், மர்டர் 2, இன்ஸ்ட்டன் கர்மா, ராங் ரசியா' உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் நெடுஞ்சாலை, நான்தான் சிவா படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு சினிமாக்காரன் என்ற மலையாளப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். இந்தப் படத்தை தாமஸ் பணிக்கர் தயாரித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தயாரிப்பாளருக்கும், பிரசாந்த் நாராயணனுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பிரசாந்த் நாராயணன், மும்பையில் தான் மாமனாருடன் இணைந்து பல தொழில்களை நடத்தி வருவதாகவும், நீங்கள் பண முதலீடு செய்தால் எங்கள் நிறுவனங்களுக்கு உங்களை இயக்குனர் ஆக்குகிறேன் என்றும் கூறியிருக்கிறார். இதை நம்பிய தாமஸ் பணிக்கர், பிரசாந்த் நாராயணன் மற்றும் அவரது மனைவி சோனாவிடம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக் கொண்ட பிரசாந்த் நாராயணன் கொடுத்த வாக்குப்படி எதையும் செய்யவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் தாமஸ் பணிக்கர் கேரள குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பிரசாந்த் நாராயணனையும், அவரது மனைவியையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரையும் வருகிற 20ந் தேதி நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

மூலக்கதை