அமீராவில் முஸ்லிம் பெண்ணின் கதை

தினமலர்  தினமலர்
அமீராவில் முஸ்லிம் பெண்ணின் கதை

முஸ்லிம் இளைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து எப்.ஐ.ஆர் என்ற படம் தயாராகி வருகிறது. இதில் முஸ்லிம் இளைஞனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த நிலையில் முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கையை மையமாக கொண்டு அமீரா என்ற படம் தயாராகி வருகிறது.

இதில் அமீரா என்கிற முஸ்லிம் பெண்ணாக வளர்ந்து வரும் மலையாள நடிகை அனு சித்தாரா நடிக்கிறார். அவருடன் ஆர்.கே.சுரேஷ், சீமான், எம்.எஸ்.பாஸ்கர், வினோதினி, உள்பட பலர் நடிக்கிறார்கள். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். ரா.சுப்பிரமணியம் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறியதாவது: அமீரா என்றால் இளவரசி என அர்த்தம். இஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளோம். இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டிருந்தோம் ஆனால் முன்பே முடித்து விடுவோம். அதற்கு காரணம் படத்தின் கதாநாயகி அனு சித்தாரா தான். மலையாளத்தில் மம்முட்டியுடன் இரண்டு, திலீப்புடன் ஒன்று என வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவர். தமிழிலும் அதேபோல ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி ஒரே டேக்கில் நடித்து அசத்தியிருக்கிறார். மொழி தெரியாதவர் என்பதால் திட்டமிட்டதை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்குமோ என தயாரிப்பாளர் நினைத்தார் தனது இயல்பான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நடிப்பால் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடிக்க உதவினார் அனு சித்தாரா என்கிறார்.

மூலக்கதை