ஜெயசித்ரா துணிச்சலான நடிகை: சிவகுமார் புகழாரம்

தினமலர்  தினமலர்
ஜெயசித்ரா துணிச்சலான நடிகை: சிவகுமார் புகழாரம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பிறந்த ஜெயசித்ரா, திரையுலக வாழ்வை தனது 6 வயதில் தொடங்கினார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர், 'குறத்தி மகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர்., முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற திரையுலக ஜாம்பவான்களுடன் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கமல்ஹாசன், பிரபு, விஜய், அஜித் என்று இன்று வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.

ஜெயசித்ராவுக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். அவரது மகனும், இசையமைப்பாளருமான அம்ரீஷ் திரையுலக நட்சத்திரங்களை அழைத்து பிரம்மாண்டமாகக் கொண்டாடினார். இந்த விழாவில் கலந்து கொண்டு சிவகுமார் பேசியதாவது:

என்னுடன் நடித்த மிக வயது குறைந்த நடிகைகளில் ஜெயசித்ராவும் ஒருவர். நானும் ஜெயசித்ராவும் இணைந்து 12 படங்களில் நடித்திருக்கிறோம். அரங்கேற்றம் படம் தான் நாங்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம். 'சொல்லத் தான் நினைக்கிறேன்' மறக்கமுடியாத படம். அதேபோல், 'வெள்ளிக்கிழமை விரதம்' படமும் மறக்க முடியாத படம். ஜெயசித்ராவின் அருகில் பாம்பை வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். பாம்புடன் இணைந்து நடித்த காட்சிகளை சவாலாக செய்து முடித்தார் ஜெயசித்ரா. காரணம் அவர் துணிச்சலான நடிகை.

சினிமாத் துறை பெண்களுக்கு மிகவும் கடினமான துறை. ஏனென்றால், பல மொழிகளில் நடித்து, திருமணம் செய்து, குழந்தைகளை வளர்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. என்னுடன் இதுவரை 87 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். அதில் சொல்லக்கூடிய அளவில் இருப்பது சிலர் தான். அதில் ஜெயசித்ராவும் ஒருவர். குடும்ப வாழ்விலும் வெற்றி பெற்று, குழந்தையையும் நன்றாக வளர்த்து, தொடர்ந்து இன்னமும் நடித்துக் கொண்டிருக்கும் மகத்தான நடிகை ஜெயசித்ரா.

இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை