இளம் இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,: ஆசிய கோப்பையில் அசத்தல் | செப்டம்பர் 07, 2019

தினமலர்  தினமலர்
இளம் இந்தியாவிடம் வீழ்ந்தது பாக்.,: ஆசிய கோப்பையில் அசத்தல் | செப்டம்பர் 07, 2019

கொழும்பு: ஆசிய கோப்பை (19 வயது) கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி 60 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இலங்கையில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கொழும்புவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

அர்ஜுன் அசத்தல்: இந்திய அணிக்கு சுவேத் பார்கர் (3) ஏமாற்றினார். பின் இணைந்து பாகிஸ்தான் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய அர்ஜுன் ஆசாத், திலக் வர்மா சதம் கடந்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 183 ரன் சேர்த்த போது அர்ஜுன் ஆசாத் (121) அவுட்டானார். திலக் வர்மா (110) நம்பிக்கை அளித்தார். கேப்டன் துருவ் ஜூரெல் (10), சஷ்வந்த் ரவாத் (18) நிலைக்கவில்லை. வருண் லாவண்டே, கரண் லால் ‘டக்–அவுட்’ ஆகினர். சுஷந்த் மிஷ்ரா (1), வித்யாதர் பாட்டீல் (1) சொற்ப ரன்னில் வெளியேறினர்.

இந்திய அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 305 ரன்கள் குவித்தது. அதர்வா (16), ஆகாஷ் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா, அபாஸ் அப்ரிதி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

நசிர் சதம்: கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ஹைதர் அலி (9), அப்துல் பங்கல்சாய் (15) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய கேப்டன் ரோஹைல் நசிர் (117) சதம் கடந்து கைகொடுத்தார். ஹரிஷ் கான் (43) ஆறுதல் தந்தார். பஹத் முனிர் (1), இர்பான் கான் (1), அபாஸ் அப்ரிதி (4), நசீம் ஷா (11), முகமது ஆமிர் (12), ஆமிர் அலி (6) நிலைக்கவில்லை.

பாகிஸ்தான் அணி 46.4 ஓவரில், 245 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் அதர்வா 3, சுஷந்த் மிஷ்ரா, வித்யாதர் பாட்டீல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

மூலக்கதை