சிக்கலில் கிரெய்க் பிராத்வைட் | செப்டம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
சிக்கலில் கிரெய்க் பிராத்வைட் | செப்டம்பர் 08, 2019

துபாய்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் விண்டீஸ் வீரர் கிரெய்க் பிராத்வைட், ஐ.சி.சி.,யின் விதிமுறைக்கு மாறாக பந்துவீசியதாக புகார் எழுந்துள்ளது.

விண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிரெய்க் பிராத்வைட் 26. இதுவரை 58 டெஸ்ட் (3477 ரன், 18 விக்கெட்), 10 ஒருநாள் (278 ரன்கள், ஒரு விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். துவக்க வீரரான இவர், சமீபத்தில் கிங்ஸ்டனில் நடந்த இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் பகுதி நேர பந்துவீச்சாளராக செயல்பட்டார். அப்போது இவர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நிர்ணயித்த அளவை விட முழங்கையை வளைத்து பந்துவீசியதாக அம்பயர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கிரெய்க் பிராத்வைட், வரும் செப். 14ம் தேதி பவுலிங் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதன் முடிவை அடிப்படையாக கொண்டு, அடுத்து வரும் போட்டிகளில் இவரை பந்துவீச அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும்.

ஏற்கனவே கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காமில் நடந்த போட்டியில் இவர், இப்படி தவறுதலாக பந்துவீசியதாக புகார் எழுந்தது. பின், பவுலிங் பரிசோதனையில் தேர்ச்சி பெற்று மீண்டும் பந்துவீசினார்.

மூலக்கதை