வெற்றியை நோக்கி ஆப்கன் | செப்டம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
வெற்றியை நோக்கி ஆப்கன் | செப்டம்பர் 08, 2019

சிட்டகாங்: சிட்டகாங் டெஸ்டில் ஆப்கானிஸ்தான் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.

வங்கதேசம் சென்ற ஆப்கானிஸ்தான் அணி சிட்டகாங்கில் நடக்கும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் 342, வங்கதேசம் 205 ரன்கள் எடுத்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்சார் (48) அவுட்டாகாமல் இருந்தனர். பின் 398 ரன்கள் இலக்குடன் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஷாத்மன் 41 ரன்கள் எடுத்தார். ரஷித் சுழற்பந்துவீச்சில் முஷ்பிகுர் (23), மோமினுல் (3) அவுட்டாகினர். மகமுதுல்லா 7 ரன்கள் மட்டும் எடுத்தார். மழை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கைவசம் 4 விக்கெட் மட்டும் மீதமுள்ள நிலையில், கடைசி நாளில் வங்கதேசம் தப்புவது கடினம்.

சாதிப்பாரா ரஷித்

ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், இரு இன்னிங்சையும் சேர்த்து (5+3) 8 விக்கெட் வீழ்த்தி உள்ளார். முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்தார். இன்று கூடுதலாக 2 விக்கெட் வீழ்த்தினால், ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் + அரை சதம் எட்டிய மூன்றாவது கேப்டன் என்ற சாதனை படைக்கலாம். இதற்கு முன், பாகிஸ்தானின் இம்ரான் கான் (எதிர்– இந்தியா, 1983), ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் (எதிர்– விண்டீஸ், 1989) இந்த இமாலய இலக்கை எட்டி இருந்தனர்.

 

 

மூலக்கதை