கம்மின்ஸ் கலக்கல்: கோப்பையை தக்க வைத்தது ஆஸி., | செப்டம்பர் 08, 2019

தினமலர்  தினமலர்
கம்மின்ஸ் கலக்கல்: கோப்பையை தக்க வைத்தது ஆஸி., | செப்டம்பர் 08, 2019

மான்செஸ்டர்: நான்காவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து போராட்டம் வீணானது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகள் முடிவில், தொடர் 1–1 என சமநிலையில் இருந்தது. நான்காவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 497 (டிக்ளேர்’), இங்கிலாந்து 301 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 186 ரன்களுக்கு ‘டிக்ளேர்’ செய்தது. இதனையடுத்து, 383 ரன்கள் இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட்டுக்கு 18 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. கம்மின்ஸ் ‘வேகத்தில்’ ஜேசன் (31), ஸ்டோக்ஸ் (1) ஆட்டமிழந்தனர். டென்லே (53) அரை சதம் கடந்தார். ஸ்டார்க் பந்தில் பேர்ஸ்டோவ் (25) அவுட்டானார். பட்லர் 34 ரன்கள் எடுத்தார். ‛தொல்லை’ தந்த லீச் (12), லபுசேன் பந்தில் சிக்கினார். ஹேசல்வுட் பந்தில் ஓவர்டன் (21 ரன், 105 பந்து) சிக்க, இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, வீழ்ந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி தொடரில் 2–1 என்ற முன்னிலையுடன் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது. கடைசி போட்டி வரும் 12ல் ஓவலில் துவங்குகிறது. 

 

மூலக்கதை