இந்தியா ‘ஏ’ அபார பந்துவீச்சு | செப்டம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
இந்தியா ‘ஏ’ அபார பந்துவீச்சு | செப்டம்பர் 09, 2019

திருவனந்தபுரம்: முதல் டெஸ்டில் இந்தியா ‘ஏ’ அணி பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 164 ரன்னுக்கு சுருண்டது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி, 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியுடன் மோதுகின்றது. முதல் டெஸ்ட் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற இந்தியா ‘ஏ’ அணி கேப்டன் சுப்மன் கில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணிக்கு கேப்டன் மார்க்ராம் (0), பீட்டர் மாலன் (0) மோசமான துவக்கம் தந்தனர். ஷர்துல் தாகூர் ‘வேகத்தில்’ கயா ஜோன்டோ (6), ஹெய்ன்ரிச் கிளாசன் (0) வெளியேறினர். செனுரன் முத்துசாமி (12) ‘ரன்–அவுட்’ ஆனார். நதீம் ‘சுழலில்’ ஜுபைர் ஹம்சா (13) சிக்கினார். கிருஷ்ணப்பா கவுதம் பந்தில் வியான் முல்டர் (21), டேன் பீட் (33), லுதோ சிபாம்லா (9) அவுட்டாகினர். லுங்கிடி (15) நிலைக்கவில்லை.

முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா ‘ஏ’ அணி 164 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. மார்கோ ஜான்சன் (45) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா ‘ஏ’ அணி சார்பில் ஷர்துல் தாகூர், கவுதம் தலா 3, நதீம் 2 விக்கெட் கைப்பற்றினர்.

கில் அரைசதம்: பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா ‘ஏ’ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாத், கேப்டன் சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 48 ரன் சேர்த்த போது கெய்க்வாத் (30) அவுட்டானார். அடுத்து வந்த ரிக்கி புய் (26), லுங்கிடி ‘வேகத்தில்’ போல்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் சுப்மன் கில் அரைசதம் கடந்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் இந்தியா ‘ஏ’ அணி 2 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தது. கில் (66), அன்கித் பாவ்னே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூலக்கதை