ரவி சாஸ்திரி ரூ. 10 கோடி * கொட்டிக் கொடுக்கும் பி.சி.சி.ஐ., | செப்டம்பர் 09, 2019

தினமலர்  தினமலர்
ரவி சாஸ்திரி ரூ. 10 கோடி * கொட்டிக் கொடுக்கும் பி.சி.சி.ஐ., | செப்டம்பர் 09, 2019

புதுடில்லி: இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக சமீபத்தில் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி 57. வரும் 2020 ‘டுவென்டி–20’ உலக கோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரு முக்கிய தொடர்கள் இவரது பயிற்சியில் வருகின்றன.

கடந்த முறை ரவி சாஸ்திரிக்கு ஆண்டுக்கு ரூ. 8 கோடி சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது 20 சதவீதம் அதிகமாக அதாவது ரூ. 9.5 கோடி முதல் ரூ. 10 கோடி வரை சம்பளம் தரப்படுவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோருக்கு ரூ. 2.5 கோடி முதல் ரூ. 3 கோடி, பவுலிங் பயிற்சியாளர் பரத் அருணுக்கு ரூ. 3.5 கோடி வரை சம்பளம் தரப்படுகிறது. இதனிடையே விண்டீஸ் தொடர் குறித்து ரவி சாஸ்திரி கூறியது:

‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு 12 மாதங்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு 18 முதல் 20 மாதங்கள் வரை உள்ளன. வரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும். ஏனெனில் ‘சீனியர்களுடன்’ இளம் வீரர்கள் கலந்து போட்டிகளில் பங்கேற்பதால், அணி வலிமையானதாக மாறும்.

மூன்று வித கிரிக்கெட்டிலும் கூடுதல் வீரர்கள் எப்போதும் சிறப்பான ‘பார்முடன்’ தயாராக இருப்பர். இப்படி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படும் அதேநேரம், இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளில் தோல்வியடையாமல் இருப்பதும் முக்கியம்.

காரணம் வந்துள்ளது

உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, அடுத்து சொந்த மண்ணில் தென் ஆப்ரிக்காவை சந்திக்க உள்ளோம். டெஸ்ட் தரவரிசையில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியா தான் உலகின் ‘நம்பர்–1’ அணி. இது நமக்கு பெருமையாக உள்ளது.

தற்போது இவ்வகை போட்டிகளில் ஏன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது காரணம் வந்துள்ளது. புள்ளி கணக்குகள் வந்துள்ளதால் தொடர்ந்து நன்கு விளையாட வேண்டும். பைனலில் யார் பங்கேற்பது என தீர்மானிக்கும் நிலை வரும் போது அங்கு இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும்.

சமீபத்திய விண்டீஸ் தொடரில் டெஸ்ட் உட்பட மூன்று வித கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி முழுமையாக வென்றது. இது முன் எப்போதும் இல்லாத வெற்றி என நினைக்கிறேன். கரீபிய மண்ணில் ஒரு போட்டியில் கூட தோற்க வில்லை. இதற்கு முன் இப்படி நடந்திருக்கும் என நினைக்கவில்லை. இனிமேலும் எதிர்காலத்தில் நடப்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

மூலக்கதை