மலிங்கா ‘ஹாட்ரிக்’ சாதனை: 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் | செப்டம்பர் 06, 2019

தினமலர்  தினமலர்
மலிங்கா ‘ஹாட்ரிக்’ சாதனை: 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் | செப்டம்பர் 06, 2019

பல்லேகெலே: நியூசிலாந்துக்கு எதிரான 3வது ‘டுவென்டி–20’ போட்டியில் ‘வேகத்தில்’ மிரட்டிய மலிங்கா ‘ஹாட்ரிக்’ உட்பட 5 விக்கெட் கைப்பற்ற, இலங்கை அணி 37 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இலங்கை சென்ற நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற நியூசிலாந்து, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி பல்லேகெலேயில் நடந்தது.

‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த இலங்கை அணிக்கு தனுஷ்கா குணதிலகா (30), டிக்வெல்லா (24), லகிரு மதுஷன்கா (20) ஓரளவு கைகொடுக்க, 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் சான்ட்னர், ஆஸ்லே தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

மலிங்கா மிரட்டல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு மலிங்கா தொல்லை தந்தார். ஆட்டத்தின் 3வது ஓவரை வீசிய இவர், கோலின் முன்ரோ (12), ரூதர்போர்டு (0), கோலின் டி கிராண்ட்ஹோம் (0), ராஸ் டெய்லர் (0) ஆகியோரை தொடர்ச்சியாக அவுட்டாக்கி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். டிம் செய்பெர்ட் (9) மலிங்காவிடம் சரணடைந்தார். நியூசிலாந்து அணி 16 ஓவரில், 88 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கேப்டன் டிம் சவுத்தீ (28) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் மலிங்கா, 4 ஓவரில், 6 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். 

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2–1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.

வேகப்பந்துவீச்சில் அசத்திய இலங்கையின் லசித் மலிங்கா, சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் 2வது முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதற்கு முன், வங்கதேசத்துக்கு எதிராக கொழும்புவில் நடந்த போட்டியில் இவர், தொடர்ச்சியாக 3 விக்கெட் கைப்பற்றினார்.

* தவிர இது, சர்வதேச அரங்கில் இவரது 5வது ‘ஹாட்ரிக்’ விக்கெட். ஏற்கனவே இவர், ஒருநாள் போட்டியில் 3 முறை (2007ல் எதிர்: தெ.ஆப்ரிக்கா, 2011ல் எதிர்: கென்யா, ஆஸ்திரேலியா) இச்சாதனை படைத்திருந்தார்.

மலிங்கா, 4 ஓவரில், 6 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச ‘டுவென்டி–20’ அரங்கில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன், 2012ல் பல்லேகெலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில், 31 ரன் வழங்கி, 5 விக்கெட் வீழ்த்தியது இவரது சிறந்த பந்துவீச்சாக இருந்தது.

நியூசிலாந்தின் கோலின் முன்ரோவை அவுட்டாக்கிய இலங்கையின் லசித் மலிங்கா, சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் பவுலரானார். இதுவரை இவர், 76 போட்டியில், 104 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் முறையே பாகிஸ்தானின் அப்ரிதி (98 விக்கெட், 99 போட்டி), வங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் (88 விக்கெட், 72 போட்டி) உள்ளனர்.

மூலக்கதை