சதிச் செயல்களில் ஈடுபட்ட 8 தீவிரவாதிகள் கைது: எல்லையில் ராணுவம் உஷார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சதிச் செயல்களில் ஈடுபட்ட 8 தீவிரவாதிகள் கைது: எல்லையில் ராணுவம் உஷார்

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் உள்ள சோபோர் மாவட்டத்தில் நேற்றிரவு நடைபெற்ற அதிரடி நடவடிக்கையின் அடிப்படையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களை அச்சுறுத்தும் விதமாக சுவரொட்டிகளை ஒட்டியது மற்றும் சமீபத்தில் அங்கு நடந்த சில பொதுமக்களின் உயிரிழப்புகள் உள்ளிட்டவை தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் தீவிரவாதிகள் 8 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களில், அஜிஸ் மிர், ஒமர் மிர், தஸீப் நஜர், இமிதியாஸ் நஜர், ஒமர் அக்பர், பைஸன் லதீப், தானிஷ் ஹபீப் மற்றும் சவுகத் அகமது மிர் ஆகிய 8 பேரும், இந்த சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர், சுவரொட்டி தயாரிப்பு இயந்திரம், துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

அப்போது, ஜமாத் இ இஸ்லாமி என்ற தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவத் தயார் நிலையில் இருந்தனர். இதனையறிந்த இந்திய ராணுவம் லீப்பா பள்ளத்தாக்கில் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும் ராவாலாகோட் மற்றும் போத்தி பாலா ஆகிய இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை