திருப்போரூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை ஜோர்: புகார் மீது போலீசார் அலட்சியம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்போரூர் பகுதியில் கள்ளச்சாராய விற்பனை ஜோர்: புகார் மீது போலீசார் அலட்சியம்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே முள்ளிப்பாக்கம் கிராமம் உள்பட பல பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெறுகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் அலட்சியமாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே முள்ளிப்பாக்கம் கிராமம் மற்றும்  வளர்குன்றம், பெருந்தண்டலம், பெரிய இரும்பேடு, அந்திரேயாபுரம் மற்றும் பெரிய விப்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கள்ளசாராய விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. குறிப்பாக முள்ளிப்பாக்கம் கிராமத்துக்கு பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து கள்ளச்சாராயம் வாங்குகின்றனர்.

மேலும் அங்கேயே குடித்துவிட்டு காலி பாக்கெட்டுகளை வீசுகின்றனர்.

இதனால் முள்ளிப்பாக்கம் கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் கிணறுகளிலும் சாராய பாக்கெட்டுக்கள் சிதறிக்கிடக்கிறது. குடிபோதையில் ஆங்காங்கே குடிமன்னர்கள் விழுந்து கிடப்பதால் பெண்கள் அச்சப்படுகின்றனர்.

சாராயம் விற்கப்படும் பகுதி செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையம், மானாம்பதி காவல் நிலையத்தின் எல்லைக்குள் வருகிறது. ‘’ஆனால் இதுபற்றி புகார் கொடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது கிடையாது’’ என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

‘’முள்ளிப்பாக்கம், சுற்றுப்புற கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பொதுமக்களும் சமூகநல ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

.

மூலக்கதை