மர்ம காய்ச்சலால் குவியும் நோயாளிகள் திருவள்ளூர் ஜி.ஹெச்.சில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மர்ம காய்ச்சலால் குவியும் நோயாளிகள் திருவள்ளூர் ஜி.ஹெச்.சில் கலெக்டர் திடீர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில், மர்ம காய்ச்சலால் நோயாளிகள் குவிந்து வருவதை தொடர்ந்து, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று காலை திடீர் ஆய்வு செய்தார். பருவ மழை காலம் துவங்கியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.

தட்ப வெட்ப சூழ்நிலையிலும் மாறி வருகிறது. காலையில் சாரல், மதிய நேரங்களில் லேசான வெயில் உணரப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.மாவட்டத்தில்தான் டெங்கு தலைவிரித்தாடி, 20க்கும் மேற்பட்டோரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பலி வாங்கியுள்ளது. இந்நிலையில், இதுவும் டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற பீதியில், சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என ஏராளமானோர் திருவள்ளூர் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதுகுறித்து நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து இன்று காலை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு, முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையினை உடனடியாக அளிக்க டாக்டர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். வார்டுகளில் குடிநீர் வழங்கவும் உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் தயாளன் உட்பட டாக்டர்கள் உடனிருந்தனர்.

படுக்கை வசதியில்லாததால் தரையில் தூங்கும் கர்ப்பிணிகள்
திருவள்ளூர்அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு பிரிவில், தினமும் 30 குழந்தைகள் வரை பிறக்கின்றன. 5 குழந்தைகள் இயல்பான பிரசவத்திலும், 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறக்கின்றன.

இங்கு அடிப்படை வசதிகள் இன்றி சிகிச்சைக்கு வரும் பெண்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள வார்டுகளில் 25க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.

இதில், குழந்தை பிரசவித்த பெண்களை படுக்க வைக்கின்றனர். அவர்கள், குறைந்தபட்சம் 9 நாட்கள் வரை படுக்கையில் இருக்க வேண்டும்.ஆனால், படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளதால், பிரசவ வார்டில் மட்டும் குழந்தை மற்றும் தாயை படுக்கையில் இருக்க அனுமதிக்கின்றனர். மற்றபடி பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிகளை தரையில் படுக்குமாறு கூறுகின்றனர்.

‘டெலிவரியானால்தான் பெட் வழங்கப்படும் அதுவரை தரையில்தான் படுக்க வேண்டும்’ என கூறுகின்றனர். வார்டின் தரைப்பகுதி, சுகாதாரமற்ற முறையில் அமைந்துள்ளதுடன், குடிநீரும் தூய்மையாக இல்லை.

கழிப்பறையும் பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசி வருகிறது.

இப்பிரச்னைகளால், பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

.

மூலக்கதை