மனதை தளர விடாதீர்கள்...நிலவை தொடும் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்...விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மனதை தளர விடாதீர்கள்...நிலவை தொடும் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம்...விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: நிலவை தொடும் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று விஞ்ஞானிகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி உருக்கமாக பேசினார். பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு இன்று காலை 8 மணிக்கு பிரதமர் மோடி வந்தார்.

அவரை இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் முன்னாள் தலைவர்கள் கஸ்தூரி ரங்கன், கிரண் ராவ் உள்ளிட்ட விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் விஞ்ஞானிகள் மத்தியில் செயற்கைகோள் கட்டுப்பாட்டு அறையில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் பெருமைக்காக நீங்கள் உழைத்திருக்கிறீர்கள்.

உங்களின் அதிருப்தியை நான் அறிவேன். சந்திரயான் 2 திட்டத்துக்காக உழைத்த விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது.

நீங்கள் நாட்டுக்காக இரவு, பகலாக தூக்கமின்றி உழைத்திருக்கிறீர்கள். உங்களின் மன தைரியத்தை பாராட்டுகிறேன்.

தாய் நாட்டின் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்.

நீங்கள் நாட்டுக்காக வாழ்கிறீர்கள்.

இந்தியாவின் கவுரவத்துக்காக வாழும் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். மனதை தளர விடாதீர்கள்.

நமக்கு ஏற்பட்ட இடையூறுகளால் இலக்கை இழந்து விடக்கூடாது. கடந்த சில மணி நேரங்களில் மிகப் பெரிய சாதனையை படைத்திருக்கிறீர்கள். நாம் மிகவும் நெருக்கமாக வந்தோம்.

ஆனால் இன்னும் நிறைய எட்ட வேண்டி உள்ளது. மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறிய நிலையில் எல்லாம் மறைந்து விட்டது.

இறுதி நேரத்தில் ஏற்பட்ட பின்னடைவு நிரந்தரம் அல்ல. பின்னடைவு ஏற்படுத்திய தாக்கத்தை நான் உணர்ந்தேன்.

நிலவை தொடும் முயற்சியில் நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எதிர்காலத்தில் நாம் மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவின் வளர்ச்சிக்காக ஈடு இணையற்ற உழைப்பை தந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெண்ணெய் மீது நடப்பவர்கள் அல்ல.

பாறை மீது நடப்பவர்கள்.

நமது விண்வெளி திட்டத்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. நமது விண்வெளி திட்டத்தில் புதிய உச்சங்கள் இனி தான் வர உள்ளன.

நம்ப முடியாத அளவுக்கு பணியாற்றி உள்ளீர்கள். குறிக்கோளை எவ்வளவு நெருங்க முடியுமோ அவ்வளவு நெருங்கினீர்கள்.

இதுவரை யாரும் முயற்சி செய்யாததை முயற்சித்தீர்கள். உங்களுக்கு ஆதரவாக நானும், நாடும் இருக்கிறோம்.

உலக அரங்கில் இந்தியா தலைநிமிர இஸ்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு உதவியாக இருந்த உங்களது குடும்பத்தினருக்கு நன்றி.
கடந்த காலத்தில் நாம் தடைகளை சந்தித்தாலும் அதை தாண்டி இருக்கிறோம்.

எழுச்சி பெற்று வந்துள்ளோம். புதிய விடியல் நமக்காக காத்திருக்கிறது.

இந்த பயணத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் நம்மை வலுப்படுத்தும். இந்த முயற்சியில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்.

தோல்வியை ஒப்புக்கொள்ளாத வெற்றி பயணம் இது.

பொறியாளர்கள், விஞ்ஞானிகளின் உழைப்பால் கர்வம் கொள்கிறேன். நிலவை எட்டும் நமது பயணம் தொடரும்.

இப்போதும் நமது ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருகிறது. விண்வெளி சக்தி கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கி வருகிறது.

லட்சியத்தை எட்டும் வரை பயணத்தை நிறுத்த வேண்டாம். விஞ்ஞானத்தின் அடிப்படையே முயற்சி செய்வது தான்.

விஞ்ஞானத்தில் தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. அறிவியல் ஆராய்ச்சியில் தோல்வி என்பதே இல்லை.

இவ்வாறு மோடி பேசினார். பின்னர் மோடி புறப்படும் போது அங்கிருந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் கைகொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

மோடி உரையை துவங்கும் போதும், முடிக்கும் போதும் 3 முறை பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்டார்.

கண்ணீர் விட்ட சிவன். . . கட்டித் தழுவி தேற்றிய மோடி

பிரதமர் மோடி விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தி பேசிக்கொண்டிருந்த போது, உணர்ச்சிப்பெருக்கை கட்டுப்படுத்த முடியாமல் பெண் விஞ்ஞானிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். அதேபோல் மோடி காரில் ஏற கிளம்பிய போது, ‘‘அவரை வழியனுப்ப ெசன்ற இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார்.

அவரை மோடி கட்டியணைத்து முதுகில் தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். அப்போது இருவரும் உணர்ச்சி மிகுந்த நிலையில் இருந்தனர்.

நீண்ட நேரம் கட்டித் தழுவி ஆறுதல் படுத்தி மோடி, சிவனை தைரியப்படுத்தி, வாழ்த்தி விட்டுச் சென்றார்.

.

மூலக்கதை