யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் பியான்கா, பெலிண்டா

தமிழ் முரசு  தமிழ் முரசு
யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் பியான்கா, பெலிண்டா

நியூயார்க்: யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதிக்கு இளம் வீராங்கனைகளான கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்கும், ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்கும் தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடந்த மகளிர் ஒற்றையரின் முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்கும், குரோஷியாவின் டோனா வெகிக்கும் மோதினர்.

இதில் முதல் செட்டில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் போராடினர். அவரவர் கேம்களை அவரவர் தக்க வைத்துக் கொள்ள அந்த செட், டை பிரேக்கர் வரை நீடித்தது.

டை பிரேக்கரில் சரியான தருணத்தில் வெகிக்கின் சர்வீஸ்களை அடுத்தடுத்து பிரேக் செய்த பெலிண்டா, அந்த செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

முதல் செட்டை பறி கொடுத்த பின்னர், டோனா வெகிக் சோர்வடைந்து விட்டார்.

2வது செட்டில் அவரது சர்வீஸ்களில் எதிர்பார்த்த அளவு வேகமும், துல்லியமும் இல்லை. இதனால் அந்த செட்டை 6-3 என  எளிதாக பெலிண்டா கைப்பற்றி, செமி பைனலுக்குள் நுழைந்தார்.

இரண்டாவது காலிறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், மிக எளிதாக ஜப்பான் வீராங்கனை வாங் கியாங்கை 6-1, 6-0 என வீழ்த்தி செமி பைனலுக்கு முன்னேறினார். 3வது காலிறுதியில் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கும் பெல்ஜியம் வீராங்கனை எலீஸ் மெர்டன்சும் மோதினர்.

இதில் முதல் செட்டை 3-6 என பறி கொடுத்த பியான்கா, 2வது செட்டில் எழுச்சியுடன் ஆடினார்.

அந்த செட்டில் அனல் பறந்த அவரது சர்வீஸ்களை மெர்டன்ஸால் எடுக்க முடியவில்லை.

இதனால் அந்த செட் 6-2 என்ற கணக்கில் பியான்கா வசமானது. 3வது செட்டிலும் பியான்காவின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது.

அடுத்தடுத்து மெர்டன்சின் 2 கேம்களை பிரேக் செய்த பியான்கா, அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி, செமி பைனலுக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெற உள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் உக்ரேனின் எலினா ஸ்விடோலினாவும், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும் மோதுகின்றனர்.

2வது அரையிறுதிப் போட்டியில் பியான்காவும், பெலிண்டாவும் மோதவுள்ளனர்.

.

மூலக்கதை