மான்செஸ்டர் டெஸ்ட்: ஸ்மித், லாபஸ்சேஞ்ச் பொறுப்பான ஆட்டம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மான்செஸ்டர் டெஸ்ட்: ஸ்மித், லாபஸ்சேஞ்ச் பொறுப்பான ஆட்டம்

மான்செஸ்டர்: மான்செஸ்டரில் நேற்று துவங்கிய ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸி.

அணியின் ஸ்டீவன்ஸ்மித் மற்றும் மாமஸ் லாபஸ்சேஞ்ச் ஆகியோர் பொறுப்பாக ஆடி, அரை சதம் கடந்து, அணியை சரிவில் இருந்து மீட்டனர். இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது.

அதில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லண்டனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

லீட்சில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி ‘த்ரில்’ வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரின் ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நேற்று துவங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட் செய்வது என முடிவெடுத்தது. ஆஸி.

அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மார்கஸ் ஹாரிசும், டேவிட் வார்னரும் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரின் 4வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார்.

அந்த பந்தை ஸ்டுவர்ட் பிராட் வீச, தவறாக கணித்து பந்தை தட்டி, கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வார்னர் வெளியேறினார். 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தின் 7வது ஓவரில் பிராட் வீசிய பந்தை காலில் வாங்கி மார்கஸ் ஹாரிசும் வீழ்ந்தார்.

இதனால் முதல் 7 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் என தள்ளாடியது ஆஸ்திரேலியா.

3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மாமஸ் லாபஸ்சேஞ்சும், ஸ்டீவன் ஸ்மித்தும் மிகவும் பொறுப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

உணவு இடைவேளையின் போது 26 ஓவர்களில் ஆஸி. அணி 98 ரன்களை எடுத்திருந்தது.

உணவு இடைவேளைக்கு பின்னர் மழை குறுக்கிட்டதால் 2 மணி நேரம் வரை ஆட்டம் தடைபட்டது. மழை நின்ற பின்னர் ஆட்டம் துவங்கியது.

அணியின் ஸ்கோர் 144 ரன்களாக இருந்த போது, அரை சதத்தை கடந்து நம்பிக்கையூட்டும் விதத்தில் ஆடிக் கொண்டிருந்த லாபஸ்சேஞ்ச் (67 ரன்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார். கிரேக் ஓவர்டன் வீசிய பந்தின் லைனை தவற விட, அது நேராக சென்று ஸ்டெம்புகளை பெயர்த்தது.

ஸ்மித்தும், லாபஸ்சேஞ்சும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 30 ஓவர்களில் 116 ரன்களை எடுத்திருந்தனர். லாபஸ்சேஞ்ச் வெளியேறிய பின்னர் டிராவிஸ் ஹாரிஸ் வந்து, ஸ்மித்துடன் இணைந்தார்.



ஸ்டீபன் ஸ்மித் 60 ரன்களிலும், டிராவிஸ் ஹாரிஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ள நிலையில் நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. முதல் நாளில் ஆஸி.

அணி 44 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து, சற்று வலுவான நிலையிலேயே உள்ளது.

இன்றும் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை