கர்நாடக மாஜி அமைச்சர் டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து ராம்நகரம் மாவட்டத்தில் 2வது நாளாக முழு அடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக மாஜி அமைச்சர் டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து ராம்நகரம் மாவட்டத்தில் 2வது நாளாக முழு அடைப்பு

பெங்களூரு: மத்திய அமாலக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் டி. கே. சிவகுமாரை கைது செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ராம்நகரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்றும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. பண பரிமாற்றத்தில் நடந்துள்ள முறைகேடு புகாரில் டி. கே. சிவகுமாரை மத்திய அமலாக்கத்துறை கைது செய்துள்ளதற்கு  கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் இரவு முதல் ராம்நகரம் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், சிவகுமாரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ராம்நகரம் மாவட்டம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இதே கோரிக்கையை முன்வைத்து இன்றும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

அதன் காரணமாக வர்த்தக நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள் 100 சதவீதம் மூடப்பட்டது.   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் எம். எஸ். அர்ச்சனா உத்தரவிட்டார். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ் உள்ளிட்ட வாகன சேவைகள் முடங்கியது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் திறந்திருந்தாலும் ஊழியர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மாவட்டம் முழுவதும் முக்கிய சாலைகளில் டயர்களை கொளுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.

மாகடி, கனகபுரா, பிடதி, ராம்நகரம், சென்னபட்டன தாலுகா தாசில்தார் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

முக்கிய சாலைகளில் மரங்கள் வெட்டி சாய்த்தும், டயர்கள் கொளுத்தியும் ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ராம்நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பிரமாண்ட பைக் ஊர்வலத்தை நடத்தினர். மாநில நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்  போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ராம்நகரம் மாவட்டம் முழுவதும் பதட்டமான சூழ்நிலை காணப்படுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஐஜிபி சரத் சந்திரா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் காலையில் ஈடுப்பட்டனர்.கலவரம் வெடித்தால் தடுப்பதற்காக தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம், கண்ணீர் புகை வீசும் வாகனம், ஆம்புலன்ஸ் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னபட்டனாவில் உள்ள முன்னாள் அமைச்சர் சி. பி. யோகேஷ்வர் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.   மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், கோலார், தும்கூரு, சிக்கபள்ளாபுரா, சித்ரதுர்கா, தவணகெரே ஷிவமொக்கா, பல்லாரி, கொப்பள், கதக், தார்வார், கல்புர்கி, சிக்கமகளூரு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று பகல் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

.

மூலக்கதை