படிப்பு இன்ஜி... விபத்தில் கால் போனது... இன்று தங்க மங்கை; சத்தமின்றி சாதித்த வீராங்கனை மானஸி

தமிழ் முரசு  தமிழ் முரசு
படிப்பு இன்ஜி... விபத்தில் கால் போனது... இன்று தங்க மங்கை; சத்தமின்றி சாதித்த வீராங்கனை மானஸி

பாசெல்: சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் உலக பாட்மின்டன் போட்டியோடு, மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா பாட்மிண்டன் சாம்பியன் போட்டியும் நடைபெற்றது. பாட்மின்டனில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான பி. வி. சிந்து முதன்முறையாக தங்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாய் பிரணீத் 36 ஆண்டுகள் பிரகாஷ் பதுகோனுக்குப் பின் வெண்கலம் வென்றார். தொடர்ந்து நடந்த பாரா உலக பாட்மின்டன் போட்டிகளில் இந்திய அணியினர் 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரமோத் பகத், மகளிர் பிரிவில் மானஸி ஜோஷி, ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரமோத் - மனோஜ் சர்க்கார் இணை தங்கத்தையும், மகளிர் ஒற்றையர் பிரிவில் பாருல் பார்மர், ஆடவர் பிரிவில் தருண் தில்லான், இரட்டையர் பிரிவில் ராஜா மங்கோத்ரா-கிருஷ்ணா வெள்ளிப் பதக்கங்களையும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் மனோஜ் சர்க்கார், சுகந்த் கடம், கிருஷ்ணா, விக்ரம் உமேஷ் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் ராகேஷ்-ராஜ்குமார் இணை வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் மானஸி ஜோஷி எஸ்எல்-3 இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனுமான பாருர் பார்மரை 21-12, 21-7 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி தங்கம் வென்றார்.

மும்பையில் பிறந்த மானஸி ஜோஷியின் தந்தை பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் ஓய்வு பெற்ற விஞ்ஞானி. எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ள மானஸி, 2011ல் நடைபெற்ற சாலை விபத்தில் தனது இடது காலை இழந்தார்.

செயற்கைக் கால் பொருத்தப்பட்ட பின் பாரா பாட்மிண்டன் ஆட்டத்தில் பயிற்சி பெற்று போட்டிகளில் கலந்து கொண்டார்.

தீவிர பயிற்சியால், 2015 உலகப் போட்டியில் வெண்கலம், 2016 ஆசிய போட்டியில் ஒற்றையர்-இரட்டையர் பிரிவில் வெண்கலம், 2017 உலகப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெண்கலம், 2018 தாய்லாந்து பாரா போட்டியில் வெண்கலம், 2018 ஆசிய பாரா போட்டியில் வெண்கலம் வென்றார்.

தற்போது உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘டோக்கியோவில் 2020ல் நடக்கவுள்ள பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது இலக்கு’’ என்றார்.

.

மூலக்கதை