பெண் தோழி சகவாசம், மது பழக்கம்...சர்ச்சைகளுடன் சாதித்த சுமித் நாகல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண் தோழி சகவாசம், மது பழக்கம்...சர்ச்சைகளுடன் சாதித்த சுமித் நாகல்

நியூயார்க்:  அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், யாராலும் அசைக்க முடியாத ஜாம்பவானான பெடரரையே ஆட்டம் காண வைத்துள்ள இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல். இப்போட்டியில் போராடி தோற்றாலும் கூட, முதல் சுற்றை கைப்பற்றி நாகல் அசத்தினார்.

இருந்தாலும், நாகலுக்கு கிடைத்த ‘தோல்வியான வெற்றி’ இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும். இவர்,  டென்னிஸ் போட்டியில் எடுத்த உடனேயே நேரடியாக களத்தில் குதிக்கவில்லை.

பல தடைகளை தாண்டிதான், இந்த இடத்துக்கு வந்துள்ளார். அரியானா மாநிலம் ஜயித்பூர் என்ற கிராமத்தில், சுரேஷ் நாகல் - கிருஷ்ண தேவி தம்பதியருக்கு மகனாக பிறந்த சுமித் நாகல், டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதியின் மிஷன் 2018 என்ற தேர்வில் முதல் பேட்சில் இடம்பெற்றவர்.

கனடாவில் பயிற்சி பின்னர் கனடா பயிற்சியாளர் பாபி மகாலிடம் பயிற்சி பெற்று தேறினார். 2014ல் ஜெர்மனி டென்னிஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து பயிற்சி மேற்கொண்டார்.

இளையோர் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடரில், வியட் நாமின் லி ஹோயங் நாம் என்பருடன் இணைந்து, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

தொடர்ந்து, 2017ல் நடைபெற்ற பெங்களூரு ஓப்பன் தொடரில் தன்னைவிட ரேங்கில் முன்னணியில் இருக்கும் வீரர்களை வீழ்த்தி பட்டமும் வென்றார்.

அரையிறுதியில் யூகி பாம்ப்ரியை வென்று, இந்திய டென்னிசில் தமது இடத்தை நிலைநிறுத்தினார். தற்போது, ஒற்றையர் பிரிவு போட்டிகளில் மட்டுமே நாகல் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதனால், யுஎஸ் ஓபனில் பெடரரை எதிர்த்து விளையாடி, தன்னை நம்பிக்கையான வீரர் பட்டியலில் இடம்பெறச் செய்துவிட்டார். இருந்தாலும், அவர் மீதான சர்ச்சை இன்றும் விலகாமல் உள்ளது.

அதாவது, சுமித் நாகலுக்கு 19 வயது இருக்கும் போது, ஸ்பெயின் அணிக்கு எதிரான டேவிஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால், பெண் தோழி ஒருவருடன் நெருக்கம், மது பழக்கம் போன்ற புகாரையடுத்து, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும், ‘பயிற்சிக்கு உரிய நேரத்தில் வருவது கிடையாது; பயிற்சியில் கலந்து கொள்வது இல்லை; பல நேரங்களில் பெண் தோழியை பயிற்சி முகாமுக்கு அழைத்து வருவது’ போன்ற புகாரும் இருந்தன.

இருந்தாலும், அத்தனை சர்ச்சை மற்றும் தடைகளையும் தாண்டி, இன்று சுமித் நாகல் ஜொலித்து வருகிறார் என்றால் மிகையாகாது.

.

மூலக்கதை