80 லட்சம் காஷ்மீர் மக்களை காப்பாற்ற எதற்கும் தயாராக இருக்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
80 லட்சம் காஷ்மீர் மக்களை காப்பாற்ற எதற்கும் தயாராக இருக்கிறோம்: பாக். பிரதமர் இம்ரான்கான் ஆவேசம்

இஸ்லாமாபாத்: இந்திய ராணுவத்தினரின் அடக்குமுறைகளில் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற எந்தவிதமான நடவடிக்கைக்கும் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஜி-7 மாநாட்டின் போது, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய மூன்றாம் நபர் தேவையில்லை’ என்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம், இந்திய பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு மக்களுக்கு டிவி மூலம் உரையாற்றினார். அப்ேபாது, பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது: காஷ்மீரில் தவித்துக்கொண்டிருக்கும் 80 லட்சம் காஷ்மீரி மக்களுக்காக நான் எப்போதும் துணைநிற்பேன்.

காஷ்மீரின் சுயாட்சியை நீக்கியுள்ளதன் மூலம், இந்திய பிரதமர் மோடி வரலாற்று பிழையை நிகழ்த்திவிட்டார். இந்திய அரசு, காஷ்மீர் பகுதியில் அதிகளவில் படைகளை குவித்துவருகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு, காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி, மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியா, ஐ. நா விதிகளுக்கு எதிராக செயல்படுகிறது.

இந்த விவகாரத்தில், யார் நமக்கு துணை நிற்கிறார்களோ இல்லையோ, காஷ்மீரில் தவித்து வரும் 80 லட்சம் காஷ்மீரி மக்களுக்காக பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும். இந்திய ராணுவத்தினரின் அடக்குமுறைகளில் இருந்து காஷ்மீர் மக்களை காப்பாற்ற எந்தவிதமான நடவடிக்கைக்கும் தயாராக இருக்கிறோம்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திட பலதடவை நாங்கள் முயற்சித்தோம். முடியாமல் போனதற்குக் காரணம் அந்நேரம் இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருந்தது.

புல்வாமா தாக்குதல் வேறு நடந்துவிட்டது. அதைவைத்து, பாகிஸ்தானை நோக்கி கைகாட்டியது இந்தியா.

கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானைச் சேர்த்துவிட பல வழிகளிலும் முயற்சித்தது இந்தியா. இச்செயலின் மூலம், பாகிஸ்தான் குறித்த இந்தியாவின் கொள்கை என்னவென்பதை எங்களால் அறிய முடிந்தது.ஆர்எஸ்எஸ் கொள்கைதான் பாஜவுக்கும். அந்தக் கொள்கையின்படி பார்த்தால், இந்தியா இந்துக்களுக்கு மட்டுமான நாடு.

வரும் செப்டம்பர் 27ம் தேதி, ஐ. நா சபையில் காஷ்மீர் விவகாரம் குறித்து உலகநாடுகளிடையே உரை நிகழ்த்துவேன். இந்த விவகாரத்தை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சியில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு நேற்று நிகழ்ந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் டிவியில் தோன்றி பேசியுள்ளார்.

எப்படி இருந்தாலும், காஷ்மீர் விவகாரம் பாகிஸ்தானுக்கு கிலி ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

.

மூலக்கதை